
அயோத்தி தீர்ப்பை நாங்கள் மனமார வரவேற்கிறோம் எனத் தெரிவித்த மதுரை ஆதினம், மேலும் கூறிய சில கருத்துகள் இப்போது கடும் விமர்சனத்தைப் பெற்று வருகின்றன.
சனிக் கிழமை இன்று காலை அயோத்தி வழக்கில், சர்ச்சைக்கு உள்ளாக்கப் பட்ட ராமஜன்ம பூமி நிலத்தில் ராமர் கோயிலைக் கட்ட மத்திய அரசு 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும், மசூதி அமைக்க அயோத்தியில் வேறு பகுதியில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், அயோத்தி தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்தார் மதுரை ஆதீனம்! அதில்… “இந்தத் தீர்ப்பை நாங்கள் மனமார வரவேற்கிறோம். இந்தத் தீர்ப்பு இந்துக்கள் பெருமை கொள்ளவோ, இஸ்லாமியர்கள் வருத்தம் கொள்ளவோ கூடிய தீர்ப்பு அல்ல. அயோத்தி தீர்ப்பை இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், இது யாருக்கும் பாதகமான தீர்ப்பு அல்ல.

தீர்ப்பை ஒட்டி எந்த ஒரு பிரச்னையும் ஏற்படக்கூடாது. இது நல்ல, நியாயமான எல்லோரும் ஏற்க வேண்டிய தீர்ப்பு. சட்டத்தை முன்வைத்து வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு.
ராமர் கோயிலை கட்ட அமைப்பு ஏற்படுத்தும் உத்தரவை வரவேற்கிறோம். அனைவருக்கும் சமமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. மசூதி கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவும் வரவேற்கத் தக்கது…. – இவ்வாறு கருத்துத் தெரிவித்த மதுரை ஆதினம் அடுத்து கூறியது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் இன்னமும் முரசொலி புரூப் ரீடர் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார், மதுரை ஆதீன மடத்தின் தலைவராக இல்லை என்பதை எடுத்துக் காட்டியுள்ளது என்கிறார்கள் சமூகத் தளங்களில்!
அயோத்தி ராமர் கோவிலையும், சபரிமலை கோயிலையும் இணைத்து அவர் கூறியவை இப்போது பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.
இது குறித்து அவர் கூறியபோது, ”எப்படி சபரிமலையில் வாவரை தரிசித்த பின் தான் ஐயப்பனை வணங்குகிறோமோ அதே போல் அயோத்தியில் மசூதி சென்று வழிபட்டு ராமரை வணங்கி மத நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்துக்கள் அயோத்தி சென்றால் ராமர் கோயிலுக்கும் செல்ல வேண்டும்; பாபர் மசூதிக்கும் செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.
உண்மையில், அடிப்படை விவரங்களை அறிந்துகொண்டுதான் பேசுகிறாரா? ஆதினம் ஆவதற்கு சிவ ஆகமங்களில் தேர்ச்சி பெற்று, எக்ஸாம் வைத்து, டெஸ்ட் எழுதி பாஸ் செய்துதான் ஆதினம் ஆனாரா என்றெல்லாம் இப்போது சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.