
நான் சர்வாதிகாரியாக மாறுவேன்; தனிப்பட்டு எனக்காக அல்ல, கட்சி வளர்ச்சிக்காக என்று திமுக., பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பாகப் பேசியுள்ளார்.
தி.மு.க பொதுக்குழு கூட்டம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ஓராண்டு 3 மாதங்களுக்கான திமுக தணிக்கைக்குழு அறிக்கை திமுக பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப் பட்டது.
இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மாநில அரசின் சில அதிகாரங்களை மத்திய அரசு தன் கைவசம் வைத்துள்ளது. மாநில சுயாட்சி தொடர்பாக ராசமன்னார் குழு பரிந்துரையை மத்திய அரசு நினைவில்கொள்ள வேண்டும்.

மாநிலங்களுக்கு தரப்பட்டிருக்கும் 18 அதிகாரங்களின் இன்றைய நிலை மிகக் கவலையாக இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு எண்ணிக்கையின் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ முறையைக் கொண்டுவர வேண்டும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர வகுப்பினர் என்று புதிதாக ஒரு வரையறையை ஏற்படுத்தி, இடஒதுக்கீட்டுக் கொள்கையையே நீர்த்துப்போகச் செய்கின்ற செயலை, மத்திய அரசு அரசியல் சட்டத்திருத்தம் வாயிலாக மேற்கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அந்தத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அளித்திடும் வேலைவாய்ப்புகள், இன்றைய நிலையில் வெகுவாகக் குறைந்துவிட்டன. பொதுத்துறை நிறுவனங்களும் படிப்படியாகத் தனியார் மயமாக்கப்பட்டுவரும் நிலையில், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு செய்திடவேண்டியது கட்டாயமாகிறது.
இதுபோன்ற உறுதியான செயல்திட்டம் ஏற்கெனவே அமெரிக்காவில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும். எனவே, தனியார் துறையிலும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த ஏதுவாக, அரசியல் சட்டப் பிரிவுகளில் உரிய திருத்தங்களைக் கொண்டுவந்து, சமூக நீதியைக் காப்பாற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்
கூட்டாட்சி அமைப்பு முறையை தான் திமுக வலியுறுத்தி வருகிறது. அரசியலமைப்பு சட்ட முகப்பில் உள்ள அடிப்படை பண்புகளை சிதைக்க ஒப்புக்கொள்ளாது.
மாநில அரசின் சில அதிகாரங்களை மத்திய அரசு தன் கைவசம் வைத்துள்ளது. விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை இந்தியாவில் பின்பற்ற வேண்டும்.
தேர்தலில் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ அதிகாரம் வேண்டும் – என்று பேசினார்.



