
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தனது மகன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வந்த நர்ஸ் ஒருவரை, வாக்குவாதம் முற்றி கன்னத்தில் அடித்ததாக சிதம்பரம் தீட்சிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிதம்பரம் வ.வு.சி., தெருவை சேர்ந்த செல்வகணபதி மனைவி லதா. ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நர்சாக பணியாற்றி வருகிறார்.
இவர் நடராஜர் கோயில் வளாகத்திலுள்ள முக்குருணி விநாயகர் சந்நிதிக்குச் சென்றுள்ளார். அப்போது, தனது மகன் பிறந்த நாள் என்பதால், மகன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூறி, அர்ச்சனைத் தட்டைக் கொடுத்தாராம்.
ஆனால் அங்கே சந்நிதியில் இருந்த தீட்சிதர் தர்ஷன், சந்நிதியின் வாசற் படியில் அமர்ந்து கொண்டு, அலட்சியமாக அங்கிருந்த படியே அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டியுள்ளார். இதனால் மன வருத்தம் அடைந்த நர்ஸ் லதா, தீட்சிதர் தர்ஷனிடம் இவ்வாறு ஆண்டவன் சந்நிதியில் அலட்சியமாக நடந்து கொள்ளலாமா? எழுந்து சென்று சந்நிதிக்கு உள்ளே சென்று தீபாராதனை காட்டி அர்ச்சனை செய்தால் என்ன என்று கேட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தீட்சிதர் தர்ஷன், நர்ஸ் லதாவின் கன்னத்தில் அடித்ததாகக் கூறப் படுகிறது. இதனால் நிலை தடுமாறி தான் விழுந்ததாகவும் கூறி, லதா சிதம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, தீட்சிதர் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசியது, மிரட்டல் விடுத்தது, பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் வழக்கு பதிவு செய்ததை அறிந்த தீட்சிதர் தர்ஷன், தலைமறைவாகிவிட்டாராம். இதை அடுத்து போலீஸார் தீட்சிதரை தேடி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், சந்நிதியில் பூஜை செய்யும் தீட்சிதர்கள், அர்ச்சகர்கள், பயபக்தியுடன் சுவாமி கும்பிட வரும் பக்தர்களைப் போல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆலயத்தில் செயல்படவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்!