
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டை நேசிக்கும் அளவுக்கும் கார்களையும் நேசிப்பவர். மிகத் தீவிரமான கார் பிரியரான அவர் விதவிதமான பல கார்களை வாங்கி தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருப்பவர்.
இந்நிலையில் இப்போது புதிதாக ஆடி நிறுவனத்தின் க்யூ 8 என்ற புதிய மாடல் காரை அறிமுகமான மூன்றாம் நாளே அவர் வாங்கியுள்ளார். அவருடைய கராஜில் வரிசையாக ஆடி கார்கள் நிறுத்தப்படும் அளவுக்கு கோலியுடன் ஆடி கார்களின் படையே உள்ளது.
இருக்கும் கார் போதாதென்று புதியதாக ஒரு ஆடி காரை வாங்கியுள்ளார் விராட் கோலி. அதுவும் அந்த கார், அண்மையில் தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கடந்த 15ம் தேதி பொங்கல் அன்று விற்பனைக்கு வந்த ஆடி கியூ8 ஆடம்பர எஸ்யூவி கார் தான் அது.

இந்த காரை இந்தியாவிலேயே முதன்முதலாக வாங்கியிருப்பவர் விராட் கோலி தானாம். ஆடம்பரமான எஸ்யூவி ரக காரான கியூ8, இதுவரை ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் கார்களில் மிகவும் விலை உயர்ந்த மாடலாகும்.
இதில் 3.0 லிட்டர் டர்போ ஃப்யூவெல் ஸ்டார்ட்டிஃபைடு இஞ்ஜெக்ஷன் கொண்ட எஞ்சின் உள்ளது. துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 6 விநாடிகளில் எட்டிப்பிடித்து விடும் இந்த கார், 340 பிஎச்பி பவர் மற்றும் 500 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும்.
ஆடி கியூ8 கார் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட தருணத்தில், விராட் கோலி அதை ஓட்டிச் செல்வது போன்ற புகைப்படம் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதன்மூலம் பொதுவெளியில் இந்த காரில் விராட் கோலி வலம் வருவது இதுவே முதல் முறையாகும்.