
நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “என்பிஆர் அவசியம், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் நான் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். சிஏஏ விவகாரத்தில் பீதி கிளப்பப்பட்டுள்ளது. இதில் இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.
இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் முதல் ஆளாக நான் எதிர்ப்பேன். சுயலாபத்திற்காக அரசியல் கட்சிகள் தூண்டி விடுகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக மாணவர்கள் ஒரு போராட்டத்தில் இறங்குவதற்கு முன்பு யோசித்து முடிவெடுத்து இறங்க வேண்டும்.
இல்லாவிட்டால் அரசியல் காட்சிகள் அவர்களை பயன்படுத்திக்கொள்ளும். யோசிக்காமல் முடிவெடுத்தால் மாணவர்களுக்குத் தான் பிரச்னை”என்றார்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், ‘ரஜினிகாந்த் நல்ல நடிகர் முதலில் கட்சித்துவங்கி கொள்கைகளைச் சொல்லட்டும். மாணவர்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை தன்னார்வத்துடனே அவர்கள் போராட்டத்தில் பங்கேற்கின்றனர் ரஜினிகாந்த் தற்போது நடிகராக இருப்பதால் அவருக்கு அரசியல் புரியவில்லை’ என்று கூறியுள்ளார்