உலகையே அச்சுறுத்திவரும் ஒரு விஷயம், `கோவிட் -19 கொரோனா வைரஸ்’. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 4,700-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸுக்கு, இன்னும் குறிப்பிட்ட தனியான மருந்துகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
ஆனால், உலகம் முழுதும் உள்ள மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் இதற்கு மருந்து கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது, கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு, அவர்களுக்கு ஏற்படும் இருமல், காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு போன்றவற்றுக்கு தனித்தனியே உள்ள மருந்துகளைக் கொடுத்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் சவாய் மன் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், தங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிக்கு, எச்.ஐ.வி, பன்றிக் காய்ச்சல், மலேரியா ஆகிய நோய்களுக்குத் தரப்படும் மருந்துகளின் கலவையை அளித்து, கொரோனா வைரஸ் தொற்றைக் குணப்படுத்தியுள்ளனர்.
இத்தாலியைச் சேர்ந்த 23 நபர்களைக் கொண்ட ஒரு குழு இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளது. ராஜஸ்தானின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குப் பயணம் மேற்கொண்ட இந்தக் குழுவில் இருந்த ஒரு பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜியால் உறுதிசெய்யப்பட்ட பிறகு, இருவரும் ராஜஸ்தானில் உள்ள சவாய் மன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், வைரஸ் பாதிக்கப்பட்ட இருவருக்கும் எச்.ஐ.வி-க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் ஒன்றை 200 மி.கி அளவும் மற்றொரு மருந்தை 50 மி.கி அளவும் சேர்த்து வழங்கியுள்ளனர். மேலும், பன்றிக்காய்ச்சல் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்து, மலேரியாவுக்குக் கொடுக்கப்படும் மருந்து ஆகியவற்றைக் கலந்து வழங்கியுள்ளனர்.
இதுபற்றி எஸ்எம்எஸ் மருத்துவக் கல்லூரி முதல்வரும் கட்டுப்பாட்டாளருமான டாக்டர் சுதிர் பண்டாரி கூறுகையில், “எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இத்தாலிய தம்பதியினர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்தோம். எச்.ஐ.வி, பன்றிக் காய்ச்சல், மலேரியா நோய்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளைத் துல்லியமான கலவையில் சரியான முறைப்படி வழங்கினோம். இதில், அந்தப் பெண் முழுவதும் குணமடைந்துள்ளார். ஆனால், அவரது கணவர் ஏற்கெனவே நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் குணமடைய நேரம் எடுத்து வருகிறது” என்று கூறியுள்ளார்.