
இந்து முன்னணி விழிப்புடன் இருந்து புகார் அளித்ததால், குமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் அக்கல்லூரியின் டீன் மூலம் வைக்கப் பட்ட கிறிஸ்துவ மதச் சின்னங்கள், வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன.
நாகர்கோவிலில் உள்ளது, குமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இங்குள்ள வளாகத்தில், பழைய கட்டடம் ஒன்று இருந்தது. அதனை உள்நோக்கத்துடன் புதுப்பிக்க நினைத்துள்ளார் மருத்துவக் கல்லூரி டீன்! இந்தக் கட்டடம் ஏன் சும்மா இருக்கு என்று சொல்லி, அந்தக் கட்டடத்தை புதுப்பித்து, அதனுள் கிறிஸ்துவ மதச் சின்னங்களை வைத்து, அக்கட்டத்தில் பிரார்த்தனைகள் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். மேலும், கிறிஸ்துவ மத பிரார்த்தனைகள் அங்கே நடப்பதற்கு வழி செய்தார்.
இது குறித்து அறிந்த குமரி மாவட்ட இந்து முன்னணியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மாவட்ட தலைவர் சோமன் தலைமையில் அந்த இடத்துக்குச் சென்ற இந்து முன்னணியினர், இது குறித்து படங்கள் எடுத்து, தகுந்த ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். மேலும் முதல்வரின் செல்லுக்கும் ஆன்லைனில் புகார் அளித்தனர். இதை அடுத்து நேற்று அந்தக் கட்டடத்தில் இருந்த மத சின்னங்கள் நீக்கப்பட்டன!
இந்து முன்னணியினர் அளித்த புகார் மனு….

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம். இந்திய நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரானா நிவாரணப் பணிகளில் பல்வேறு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தொண்டர்கள் இரவு பகல் பார்க்காமல் உணவு வழங்குதலும் மற்றும் சுகாதார பணிகளிலும் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி, இதையெல்லாம் மறந்துவிட்டு கொரோனா மருத்துவ பணியில் கவனம் செலுத்துவதை விட அவர் சார்ந்திருக்கும் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதில் குறியாக இருக்கிறார்.
தற்போது மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதியதாக ஜெபக்கூடத்தை ஏற்படுத்தி அதில் கிறிஸ்துவ ஜெப கூட்டம் நடத்துவதற்கான முயற்சியை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
யார் எப்படிப் போனாலும் எந்த நிலை வந்தாலும் தன் சார்ந்த கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப வேண்டும் என்ற புத்தியுடன் செயல்படும் இந்த மருத்துவக் கல்லூரி முதல்வரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்..
– இப்படிக்கு
இந்து முன்னணி மாவட்ட தலைவர்
மிசா.சோமன்

இதனிடையே, இது குறித்து குமரி மாவட்ட பாஜக.,வினரும் ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய கட்டடம் புதுப்பிக்கப்பட்டு கிறிஸ்துவ மத சின்னம் வைக்கப்பட்டதையும், மதம் சார்ந்த வசனங்களும் எழுதி வைக்கப் பட்டு, பிரார்த்தனை நடத்தவும் வசதி செய்யப்பட்டதையும் கண்டிப்பதாக பாஜக.,வும் கூறியது.
மேலும், அரசு மருத்துவமனை வளாகத்தில் இது போன்ற ஏற்பாடுகள் தேவையற்றது என்பதை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்திச் சொல்லப் பட்டதுடன், புகாரும் அளிக்கப்பட்டது

இதை அடுத்து ஆட்சியரின் உத்தரவுப்படி கிறிஸ்துவ வசனங்கள் முதலியவை நீக்கப்பட்டன. ஆயினும் இதற்கு காரணமான மருத்துவ கல்லூரி டீன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!