மதுரையில் கடைகள் திறந்திருந்தாலும், குறைந்த அளவு காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு இருந்தன. மதுரை நகரில் சிறப்பு ஊரடங்கு முடிந்து வியாழக்கிழமை காலை கடைகள் பல திறக்கப்பட்டன. இருந்தபோதிலும் , அண்ணாநகர், யாகப்பநகர், மேலமடை, கருப்பாயூரணி, டிவிஎஸ் நகர், பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் இருந்த சிறிய கடைகளில் குறைந்தளவு காய்கறிகளே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதனால் பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தில் காய்கறிகளை தேடி அலைய நேரிட்டது. மேலும், எண்ணைக் கடைகளில் மக்கள் வரிசையாக நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர். அண்ணா நகரில் பஸ் திரும்பும் இடம், வண்டியூர் பகுதிகளில் சில தெருக்கள் தடுப்புகளால் அடைக்கப் பட்டிருந்தன.
வழக்கம் போல பெரிய கடைகளை தவிர சிறிய கடைகள் செயல்பட்டன. காய்கறி சந்தைக்கு வரத்து குறைந்ததால், குறைந்தளவு காய்கறிகளே விற்பனைக்கு வந்துள்ளன. திண்டுக்கல் மாவட்டம் கீரனூரிலிருந்து பழனிக்கு மிளகாய் விற்பனை செய்து விட்டு திரும்பிய விவசாயி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ததாக சர்ச்சை ஏற்பட்டது. மதுரை நகரில் இன்று காலை தெருக்களில் நடமாட்டம் இருப்பதைக் காண முடிந்தது.
முன்னதாக, மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அரசு அனுமதித்திருந்தது. மதுரை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில், வியாழக்கிழமை மட்டும் காலை முதல் மாலை 5 மணி வரை கடைகளும், வெள்ளிக்கிழமை முதல் மே. 3..ம் தேதி வரை காலை ஆறு மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் மட்டுமே பங்கு கொண்டு, புதன் கிழமை நேற்று சித்திரைத் திருவிழா கொடியேற்றினர்.
- செய்தியாளர்: ரவிச்சந்திரன், மதுரை