
தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40 ஆயிரம் கோயில்களில் முக்கியமான கோயில்கள் திறக்கப்படும் என்றும், குறைந்த அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள் என்றும் உலவும் செய்தி வெறும் வதந்தி தான் என்று கூறியுள்ளது அறநிலையத்துறை.
தற்போது, கொரோனா அச்சம் காரணமாக ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதால், கோவில்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்களின் வசதிக்காக புகழ்பெற்ற சில கோவில்களின் சிறப்பு பூஜைகள், பிரதோஷ வழிபாடு ஆகியவை ஆன்லைன் வழியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்நிலையில், 4வது கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டு, மே 31ம் தேதி வரை வழிபாட்டுத் தலங்கள் மூடியிருக்கும் என்பதால், அதன் பின்னர் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறக்கலாமே என்று பலரும் கோரிக்கை வைத்தனர். இது குறித்து வழக்கு ஒன்றும் உயர் நீதிமன்றத்தில் ஹாக்கல் செய்யப் பட்டு, அது தள்ளுபடி ஆனது
இதனிடையே, தமிழகத்தில் மது குடிப்பவர்களுக்காக தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி அளித்தது. இது பக்தர்களிடையே பெரும் மன வேதனையை அளித்தது. டாஸ்மாக் கடைக்குச் செல்பவர்கள் ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்துச் செல்பவர்கள் போலும், கோயிலுக்குச் செல்பவர்கள் கட்டுப்பாடு அற்று செல்பவர்கள் போலும் அரசு நினைக்கிறதா என்று கூறி, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என பக்தர்கள் குழுக்கள், ஆன்மிக இயங்கள் கோரிக்கை வைத்தன.
இந்நிலையில் சென்னையில் உள்ள அறநிலையத்துறை தலைமையகத்தில், பக்தர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க அறநிலையத்துறை ஆணையர் தலைமையில் நேற்று காலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது என்றும், அந்தக் கூட்டத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள், டோக்கன்கள் வழங்கப்பட்டு 500 பேர் வரை அனுமதி என்று கூறி, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க முடிவு செய்ததாகவும் செய்திகள் பரவின. ஆனா, இதனை வெறும் வதந்தி என்று குறிப்பிட்டு, அறநிலையத்துறை வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.
மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுக்குப் பின்பே வழிபாட்டுத் தலங்கள் தரிசனத்திற்கு திறக்கப்படும். எனவே வெற்று வதந்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன!