விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் அதிகமாகி வருகின்றன. வன விலங்குகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவில்லை எனில் இவ்வாறு நோய் பரவுவது மேலும் அதிகமாகும் என்று ஐ.நா வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிக இறைச்சி உட்கொள்ளுதல், மாற்றமடையும் விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை கோவிட்-19 போன்ற நோய்களுக்கு காரணமாவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இவ்வாறு விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய் பரவுவதை தடுக்காவிட்டால், இதனால் ஆண்டுக்கு 20 லட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் கோவிட் 19 தொற்றால் உலகப் பொருளாதாரத்தில் 9 ட்ரில்லியன் டாலர்கள் செலவாகும் என்று கூறப்படுகிறது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களை ஆங்கிலத்தில் ஜுனோடிக் நோய்கள் (Zoonotic diseases) என்று கூறுவார்கள்.
எபோலா, வெஸ்ட் நைல் வைரஸ் மற்றும் சார்ஸ் போன்ற நோய் தொற்றுகளும் இந்த வகையை சேர்ந்தவைதான். இவை அனைத்தும் விலங்குகளிடம் இருந்து தோன்றி மனிதர்களுக்குப் பரவியவைதான்.
ஆனால், இந்த பரவுதல் தானாக நடப்பதில்லை. நிலங்களை அழிப்பது, வன விலங்குகளை கொல்லுதல், வளங்களைப் பாதுகாக்காமல் இருப்பது மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் இந்த பரவுதல் நிகழ்வதாக ஐ.நாவின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் சர்வதேச இறைச்சி விலங்குகள் ஆய்வு மையத்தின் அறிக்கை கூறுகிறது.
“கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த ஆறு வைரஸ் தொற்றுகளை கடந்த நூற்றாண்டில் இந்த உலகம் சந்தித்திருக்கிறது,” என்கிறார் ஐ.நாவின் சுற்றுச்சூழல் திட்டத்தின் துணை இயக்குநரும், துணைப் பொது செயலாளருமான இங்கர் ஆண்டர்சன்.
கடந்த இரு தசாப்தங்களில் கோவிட் 19 தொற்றுக்கு முன்பு ஏற்பட்ட இதுபோன்ற நோய்களால் 100 பில்லியன் டாலர்கள் அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது”
ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் ஆந்த்ராக்ஸ், போவைன் காசநோய் மற்றும் ரேபீஸ் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களால் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் உயிரிழப்பதாக இங்கர் கூறுகிறார்.
இந்த சமூகங்கள் இறைச்சி மீது அதிக சார்பு உடைய வகையாகவும், வன விலங்குகளுக்கு அருகாமையில் வசிப்பவையாக இருக்கிறது”
உதாரணமாக கடந்த 50 ஆண்டுகளில் இறைச்சி தயாரிப்பு 260% அதிகரித்துள்ளதாக இங்கர் தெரிவிக்கிறார்.
காடுகளை அழித்து கட்டமைப்பு வசதிகளை பெரிதுபடுத்தி, வளங்களை சுரண்டுகிறோம் என்றும் அவர் கூறுகிறார்.
“அணைகள், நீர்ப் பாசனம் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றால் 25 சதவீத நோய்த் தொற்று மனிதர்களுக்கு ஏற்படுகிறது. பயணம், போக்குவரத்து மற்றும் உணவு சங்கிலியால் எல்லைகள் அழிக்கப்படுகின்றன. பருவ நிலை மாற்றத்தால், நோய்க்கிருமிகள் பரவுவது எளிதாகிறது.”
வன விலங்குகளையும் சுற்றுச்சூழல் அமைப்பையும் அழிப்பது இப்படியே தொடர்ந்தால், இவ்வாறு விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய் பரவுவது அதிகரித்துக் கொண்டே போவதை எதிர்பார்க்க முடியும் என்று இங்கர் கூறுகிறார்.
எதிர்காலத்தில் வைரஸ் நோய்த் தொற்று பரவுதலை தடுக்க வேண்டும் என்றால், நம் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.