
101 வகை உணவுடன் மருமகளுக்கு விருந்து கொடுத்து அசர வைத்த மாமியார் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஊரே மெச்சும் மாமியார் என புகழும் அளவுக்கு அவர் பிரபலமடைந்து வருகிறார்.
மாமியார்- மருமகள் உறவு என்பது ஒருவரை ஒருவரை தாயாகவும் மகளாகவும் பார்க்கப்படும் உறவு.
ஆனால் இன்று மாமியார்- மருமகள் என்றாலே சில வீடுகளில் ஆகாத மருமகள் கைப்பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்றாகிவிடுகிறது. வரும் பெண்ணை தன் மகளாக காணாவிட்டாலும் ஒரு உயிரும் உணர்வும் உள்ள ஜீவனாக கூட மதிப்பதில்லை

இந்நிலையில் மாமியார் தன் மருகளுக்கு அளித்துள்ள விருந்து அனைவரையும் பிரமிக்கவும் பெருமிதமும் அடைய வைத்திருக்கிறது.
மதுரை மாவட்டம் முன்றுமாவடி பகுதியை சேர்ந்த அஹிலா – அபுல்கலாம் தம்பதியனரின் மகன் அபுல்ஹசனுக்கும் ஷப்னாவுக்கும் கடந்த 9-ஆம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் திருமண விருந்திற்காக உறவினர்கள் அழைப்பு விடுத்த நிலையில் ஊரடங்கு காரணமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் வீட்டிற்கு முதல்முறையாக வந்த மருமகள் ஷப்னாவிற்கு தானே விருந்து அளிக்க நினைத்த மாமியார் அஹிலா, பிரியாணி, பிரைட் ரைஸ், மட்டன், சிக்கன், மீன், முட்டை, காடை, லெமன், புளியோதரை, தயிர் சாதம், ஆம்லெட், புரோட்டா, சப்பாத்தி தொடங்கி அனைத்து வகையான சூப்புகள், பழ ஜூஸ்கள் முதல் அப்பளம் வரை 101 வகையான உணவுகளை தயாரித்து நீண்ட தலை வாழை இலையில் வைத்து விருந்து வழங்கியுள்ளார்.

ஒவ்வொன்றின் சுவையையும் பார்த்து பார்த்து செய்த அவர் தனது மருமகளுக்கு தானே ஊட்டிவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு ஆந்திர மாநிலத்தில் 67 வகையான உணவுகளை மருமகனுக்கு வழங்கிய மாமியாரின் வீடியோ ட்ரெண்டாகிய நிலையில் மதுரையில் உள்ள ஒரு மாமியார் மருமகளுக்கு வழங்கிய இந்த பிரம்மாண்ட விருந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
மாமியார் மருமகள் என்றால் எதிரிகளாக சீரியல்களில் சித்தரிக்கும் நிலையில் மதுரை மாமியாரின் செயல் மாமியார் மருமகள் உறவிற்கு புதிய இலக்கணத்தை உருவாக்கியுள்ளது.
மருமகளுக்காக ஸ்டெவும் கேஸ்ஸூம் வெடிக்க மட்டுமே பயன்பட்ட நிலையில் விருந்துக்காகவும் கேஸ் உபயோகப்படும் என மாமியார்களுக்கு புரிய வைக்கும் ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.



