கொரோனா: தொற்றை துரத்திய 101 வயது மூதாட்டிகள்!

இந்தியா சற்றுமுன்
andra - 2026

101 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு அனைவருக்கும் நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளித்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த 101 வயதான பாலகுரி மங்கம்மா என்ற மூதாட்டிக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் அவருக்கு சிறந்த சிகிச்சையை அளித்தனர். மங்கம்மாவும் நோயின் தன்மையை அறிந்து மருத்துவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததால் தற்போது தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனையின் சூப்பிரண்டு ராம் கூறுகையில், கொரோனா காரணமாக உயிருக்கு பயப்படுபவர்களுக்கு மங்கம்மா ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார். தனது 101 வயதிலும், மங்கம்மா தைரியமாகவும் நம்பிக்கையுடனும் இருந்தார்.

சிகிச்சைக்கு ஒத்துழைத்தார், இப்போது ஆரோக்கியமான நிலையில் குணமடைந்து வீடு திரும்பினார் எனத் தெரிவித்துள்ளனர்

இதேபோல் கர்நாடகாவில் அண்மையில் 100 வயதான ஹல்லமா என்ற மூதாட்டி கொரோனாவில் இருந்து குணமடைந்தார். வயதானவர்களை தான் கொரோனா கொல்லும் என கூறப்படும் நிலையில், மங்கம்மா, ஹல்லமா போன்றோர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வருவது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.