
மூதாட்டிக்கு உதவ செய்ய சென்ற போது அபராதம் விதிப்பு; மனிதநேயத்துடன் அபராதத்தை ரத்து செய்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையருக்கு நன்றி தெரிவித்த இளைஞர்!
நெல்லை வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். வயது 24. இவர் லேப்டாப் சர்வீஸ் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
அன்று இரவு சுமார் 10 மணி. வேலையை முடித்துக் கொண்டு மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் வண்ணார்பேட்டை பகுதியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் சென்றபோது அங்கு சாலையோரம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளிடம் தன்னை ஏற்றிச் செல்லுமாறு கூறிக் கொண்டிருந்தார். இதனை மணிகண்டன் அந்த மூதாட்டியை அந்த மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு நெல்லை டவுனில் உள்ள அவரது வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
டவுன் பொருட்காட்சி அருகே சென்று கொண்டிருந்த போது வாகன சோதனை ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் ஹெல்மெட் அணியாமல் சென்ற மணிகண்டன் வாகனத்தை நிறுத்தி அவருக்கு அபராதம் விதித்தனர்.
அப்போது மணிகண்டன் இரவு நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் தவித்த மூதாட்டிக்கு உதவி செய்வதற்காக சென்று கொண்டிருக்கிறேன் என்று போலீசாரிடம் கூறினார். எனினும் போலீசார் அவருக்கு அபராதம் விதித்ததால் மன உளைச்சல் அடைந்தார் மணிகண்டன்!
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டார். பாட்டிக்கு உதவி செய்யச் சென்ற எனக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து விட்டார்கள் என வேதனையுடன் பதிவு செய்திருந்தார்.
இதுகுறித்து அறிந்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன், இரவு நேரத்தில் தவித்த மூதாட்டிக்கு உதவி செய்யும் நோக்கில் சென்ற மனிதாபிமான இளைஞர் மணிகண்டனுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய முடிவு செய்தார்.
துணை ஆணையர் சரவணன் ஆலோசனையின் பேரில் நெல்லை டவுண் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் தனது அலுவலகத்திற்கு மணிகண்டனை நேரில் வரவழைத்து இனிமேல் வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் செல்லக்கூடாது என அறிவுரை கூறி அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்வதாகக் கூறினார்.
இந்நிலையில் மணிகண்டன் தனது தந்தையுடன் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் அலுவலகத்திற்கு காலை நேரில் சென்று துணை ஆணையர் சரவணனை நேரில் சந்தித்து மனிதநேயத்துடன் அபராத தொகையை ரத்து செய்து நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அப்போது காவல் துணை ஆணையர் சரவணன், வாகனம் கிடைக்காமல் இரவு நேரத்தில் தவித்த மூதாட்டிக்கு உதவியதைப் பாராட்டி மணிகண்டனுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.