
- திருச்சி லலிதா ஜுவல்லரி உள்ளிட்ட நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு
- 6 மாதமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொள்ளையன் முருகன் உயிரிழப்பு
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள லலிதா ஜுவல்லரியில் கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி நள்ளிரவில் சுவரை துளையிட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 28 கிலோ தங்க, வைர, பிளாட்டின நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரிக்க மாநகர காவல் ஆணையர் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்ந கொள்ளையை திருவாரூர் சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த முருகன் தலைமையிலான கும்பல் நடத்தியது காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் தெரியவந்தது.
கொள்ளைக்கு உதவிய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், முருகன் அக்கா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான முருகன் உள்ளிட்டோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தான். மற்றொரு முக்கிய குற்றவாளியான முருகனின் அக்கா மகன் சுரேஷும் நீதிமன்றத்தில் சரணடைந்தான்.
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் நீதிமன்ற அனுமதியுடன் திருச்சி அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டனர். விசாரணையின்போது திருவெறும்பூர் அருகே காவிரிக் கரையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளை போலீசார் மீட்டனர். தொடர்ந்து சுரேஷ், கணேசன், மணிகண்டன் ஆகியோரிடமிருந்தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன.
இந்நிலையில், முருகன் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தான். பெங்களூரு சிறையில் இருந்த அவன் உடல்நலம் மோசமானதால் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்த நிலையில் இன்று காலை 4 மணியளவில் முருகன் உயிரிழந்துள்ளான்.