குஜராத் மாநிலத்தில் இன்று தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தேசியக் கவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி பேசி அசத்தினார்.
நர்மதா மாவட்டத்தின் கெவாடியாவில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பேசிய அவர், பாரதியாரின் மன்னும் இமயமலை எங்கள் மலையே, மாநிலம் மேல் இது போல் பிறிது இல்லையே என்ற பாடலின் முதல் 8 வரிகளை தமிழிலேயே கூறினார்.
பின்னர் இந்தப் பாடல் வரிகளுக்கான பொருளை அவர் இந்தியிலும் மொழிபெயர்த்துக் கூறினார். அப்போது அவர், உலகின் மிகப் பழமையான மொழியான தமிழில் நம் நாட்டைப் புகழ்ந்து சுப்ரமண்ய பாரதி எழுதி உள்ளதாகக் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி தற்போது பல இடங்களில் தமிழ்ப் பாடல் வரிகளை மேற்கோள் இட்டு உரை நிகழ்த்தி வருகிறார். இதே போன்று சுதந்திர தின உரையிலும் பாரதியின் வரிகளை பிரதமர் மோடி மேற்கோள் காட்டினார். லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசும்போதும் திருக்குறளை மேற்கோள் காட்டினார்.
இன்று சர்தார் வல்லப பாய் படேலின் 145 வது பிறந்தநாள் நாடு முழுதும் கொண்டாடப் பட்டது. இதனை முன்னிட்டு குஜராத்தில் உள்ள சர்தார் வல்லப பாய் படேலின் பிரம்மாண்ட சிலைக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.
ஒற்றுமை சிலை என்று பெயரிடப் பட்டுள்ள படேலின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் மக்களிடையே உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது, பாரதியாரின் மன்னும் இமயமலை எனத் தொடங்கும் தமிழ்க் கவிதையை தமிழில் கூறி பின்னர் அதற்கான விளக்கத்தை ஹிந்தியில் கூறினார்.
மன்னும் இமயமலை எங்கள் மலையே;
மாநிலமீததுபோல் பிறிதில்லையே!
இன்நறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே;
இங்கிதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே?
பன்னரும் உபநிட நூல்எங்கள் நூலே;
பார்மிசை ஏதொரு நூலிது போலே!
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே;
போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே!
மாரத வீரர் மலிந்த நன் நாடு;
மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு!
நாரத கான நலம் திகழ் நாடு;
நல்லன யாவையும் நாடுறு நாடு!
பூரண ஞானம் பொலிந்த நன் நாடு;
புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு!
பாரத நாடு பழம்பெரும் நாடே;
பாடுவம் இதை எமக்கில்லை ஈடே! .