சமுதாய, அரசியல், மதம் உள்ளிட்ட கூட்டங்களுக்கான அனுமதி, மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் அதன் மாநில தலைவர் எல் முருகன் வேல் யாத்திரை என்று அறிவித்தார். வேல் யாத்திரை நவம்பர் ஆறாம் தேதி திருத்தணியில் தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும் என்று அறிவித்து அதற்கான பயண வழித் திட்டத்தையும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த வேல் யாத்திரையை தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சிகளும் விரும்பவில்லை அதிமுக உள்பட! எனவே ஆளும் அதிமுக அரசு அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக பல்வேறு சாக்குப் போக்குகளை நீதிமன்றத்தில் தெரிவித்தது
நீதிமன்றத்திலும்கூட, வேல் யாத்திரை குறித்த செய்திகளும் படங்களும் மட்டுமே பார்வையில் பட்ட நிலையில் அதிமுக மற்றும் மற்ற அரசியல் கட்சிகள் மேற்கொண்ட பல்வேறு போராட்டங்கள் பொதுக்கூட்டங்கள் இவற்றில் கூடும் தொண்டர்கள் வாடகைத் தொண்டர்கள் குறித்த படங்கள் எதுவும் நீதிமன்றத்தின் பார்வையில் படாமல் ஊடகங்களும் அரசும் மறைத்து விட்டன
தற்போது நீதிமன்றம் பாஜக நடத்தும் வேல் யாத்திரை மட்டுமே தங்கள் பார்வையில் பட்டது என்று தெரிவித்து விட்டதால் மற்ற கட்சிகள் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி பங்குபெறும் கூட்டங்கள் அதிமுகவினர் நடத்தும் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு முகக் கவசம், தனிநபர் இடைவெளி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி கூடும் தொண்டர்களின் கூட்டத்தை பலரும் படம் பிடித்து இப்போது பரப்பி வருகின்றனர். எனவே இந்தக் கூட்டங்கள் குறித்த படங்களும் செய்திகளும் நீதிமன்றங்களின் பார்வையில் பட்டு, அதன் மூலம் அரசுக்கு நீதிமன்றம் ஏதும் கேள்வி எழுப்பி, ஏதாவது சிக்கல் ஏற்படலாம் என்று கருதி அதிமுக அரசு இப்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது!
இது குறித்து இன்று வெளியான அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது பண்டிகை காலம் என்பதால், பொதுமக்கள் பண்டிகை கொண்டாட்டத்திற்காக பல்வேறு பொருட்களை வாங்க கடைவீதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அதிகமாக கூடுகின்றனர். அவ்வாறு கூடும்போது, முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தாது இருப்பது, ஊடகங்கள் வாயிலாகவும், களஆய்வுகள் மூலமாகவும் அரசின் கவனத்திற்கு தெரிய வருகிறது.
வெளிநாடுகளில் கொரொனா நோய்த் தொற்றானது இரண்டாம் அலையாக மீண்டும் பரவும் நிலையை நாம் காண முடிகின்றது. இச்சூழ்நிலையில் நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்களுக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் 16.11.2020 முதல் நடத்த அனுமதிக்கப்பட்ட உத்தரவு தற்போது இரத்து செய்யப்படுகிறது. அவற்றிற்கான தடை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் தொடர உத்தரவிடப் படுகிறது.