
தமிழக முதலமைச்சர், திரு. பழனிச்சாமி அவர்களே, அமைச்சர், திரு. பாண்டியராஜன் அவர்களே, திரு. கே. ரவி, நிறுவனர், வானவில் கலாச்சார மையம், மதிப்பிற்குரிய பெரியோர்களே, நண்பர்களே, வணக்கம். நமஸ்தே.
தொடக்கத்திலேயே நான் என்னுடைய, அஞ்சலிகளை, மாமனிதர் பாரதியாரின் பிறந்தநாளன்று, காணிக்கையாக்குகிறேன். இத்தகைய ஒரு சிறப்பான நாளன்று, சர்வதேச பாரதியாரின்….. கொண்டாட்டங்களில், பங்குபெற நான் மிகவும் உவப்பெய்துகின்றேன்.
நடப்பாண்டுக்கான பாரதி விருதினை, அளிப்பதிலும் நான், பெருமகிழ்வடைகிறேன். இதைப் பெறுபவர் பேரறிஞர், திரு. ஸ்ரீனி விஸ்வநாதன் அவர்கள். இவர் தன்னுடைய, வாழ்க்கை முழுவதையும் பாரதியின் ஆக்கங்களை, ஆய்வு செய்வதில், செலவு செய்திருக்கின்றார்.
தனது 86ஆவது அகவையிலும், சுறுசுறுப்போடு ஆய்வுப் பணிகளை, மேற்கொண்டமைக்கு, நான் அவரைப் பெரிதும் பாராட்டுகின்றேன். எப்படி விவரிப்பது, சுப்பிரமணிய பாரதியை என்று பார்த்தால், இது மிகவும் கடினமான விஷயம். பாரதியாரை, ஏதோ ஒரு தொழிலோடு மட்டுமே, அல்லது கோணத்துடனோ தொடர்புபடுத்தி, பார்க்கவே இயலாது. அவர் ஒரு, கவிஞர், ஒரு எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி, சுதந்திரப் போராளி, மனிதநேயவாதி, இன்னும் அதற்கும் மேலே.
அவருடைய படைப்புக்களைப் பார்த்து மலைக்க மட்டுமே முடியும். அவருடைய கவிதைகள், அவருடைய தத்துவங்கள், மற்றும் அவருடைய வாழ்க்கை. மேலும் அவருக்கு, நெருங்கிய தொடர்பிருந்த, நகரம் வாராணசி. இந்நகரின், நாடாளுமன்ற, பிரதிநிதி என்ற பாக்கியம், எனக்கிருக்கிறது.
அண்மையிலே நான் அவருடைய, படைப்புத் தொகுப்புக்களைப் பார்த்தேன். 16 தொகுதிகளடங்கிய வெளியீடுகள் இவை. சுருங்கச் சொன்னால், அவருடைய 39 ஆண்டுக்கால வாழ்க்கையில், அவர் எத்தனையோ இழந்திருக்கிறார், எத்தனையோ புரிந்திருக்கிறார், அத்தனையிலும் அவர், சிறந்து விளங்கியிருக்கிறார். அவருடைய எழுத்துக்கள், நமக்கெல்லாம் வழிதுலக்கும் விளக்குகள். வளமான எதிர்காலம் காட்டுபவை.
நண்பர்களே, இன்றைய இளைஞர்கள், சுப்பிரமணிய பாரதியிடமிருந்து, கற்க வேண்டியவை நிறைய இருக்கின்றன. மிகவும் முக்கியமாக, தைரியமாக இருத்தல். அச்சம் என்பதை அவர் அறிந்தவர் இல்லை. அவர் கூறுவார்….. அச்சமில்லை…… அச்சமில்லை, அச்சமென்பது இல்லையே!!
இச்சகத்துளோரெலாம், எதிர்த்து நின்ற போதிலும். இதன் பொருள், எனக்கு பயமே கிடையாது, எனக்கு பயமே கிடையாது. உலகம் எல்லாம், என்னை எதிர்த்து வந்தாலும் கூட. இந்த உணர்வை நான் இன்றைய இளம் இந்தியாவில் காண்கிறேன். அவர்கள் புதுமைகள் படைத்தல் மற்றும் சிறந்து விளங்கலில், முன்னணி வகிக்கும் போது இந்த உணர்வை, நான் காண்கிறேன்.
இந்தியாவின் ஸ்டார்ட் அப் துறையில், அங்கிங்கெனாதபடி அச்சமறியா, இளைஞர்கள், மனித சமூகத்துக்கு ஏதோ புதுமையை அளித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட, என்னால் முடியும் என்ற உணர்வு, நமது நாட்டுக்கும், நாம் வாழும் உலகிற்கும், அற்புதங்களைக் கொண்டு சேர்க்கும்.
நண்பர்களே, பழமையும் புதுமையும் கொண்ட, ஆரோக்கியமான கலவையை, மிகவும் ஆழமாக, ஆதரித்தவர் பாரதியார். வேர்களுடன் தொடர்பும் வேண்டும், எதிர்காலக் கண்ணோட்டமும் வேண்டும், என்ற ஞானத்தை, வெளிப்படுத்தியவர் பாரதியார்.
தன் இரு கண்களாகவே, தமிழ் மொழியையும், பாரதத் தாய்த்திருநாட்டையும், அவர் ஆழமாக பாவித்தார். அவர் தனது கவிதைகளில், பண்டைய பாரதத்தின் பெருமைகளை, வேதங்கள் உபநிடதங்களின், சீர்மை உயர்வுகளை, நமது கலாச்சாரம்…… நமது பாரம்பரியம், மற்றும், நமது மகத்தான கடந்தகாலத்தை வடித்தார்.
ஆனால் அதே வேளையில், அவர் நமக்கு ஒரு எச்சரிக்கையும் விடுத்தார். கடந்து போன பொற்காலத்தில் குளிர் காய்வது, போதுமானது இல்லையென்றார். நாம் ஒரு அறிவியல் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும், இடையறாத தேடலே வளர்ச்சிக்கு வித்தாகும் என்றார்.
நண்பர்களே, மஹாகவி பாரதியாருடைய, முன்னேற்றத்துக்கான விளக்கத்தில் பெண்களுக்கு மையமானதொரு இடமுண்டு. அவருடைய மிக முக்கியமான கனவுகளில் ஒன்று, சுதந்திரமான அதிகாரப் பங்களிப்புடைய பெண்கள். மஹாகவி பாரதியார், தங்களுடைய, தலைநிமிர்த்திப் பெண்கள், நடக்க வேண்டும், நேர்கொண்ட பார்வையால், மற்றவர்களைப் பார்க்க வேண்டும், என்று எழுதினார். அவருடைய தொலைநோக்கு நமக்கு உத்வேகம் அளிக்கிறது.
பெண்கள் தலைமையிலான அதிகாரப் பங்களிப்பை, உறுதிப்படுத்த நாங்கள் பணியாற்றுகிறோம். எங்களுடைய அரசின் ஒவ்வொரு துறையிலும் பெண்களின், கண்ணியத்துக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருவது, உங்களுக்கு எல்லாம், மிக்க மகிழ்ச்சியை அளிக்கும் என்று நம்புகிறேன். இன்று, 15 கோடிக்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர், முத்ரா திட்டம் போன்ற திட்டங்களால், பயனடைந்து வருகின்றார்கள். அவர்கள் தங்களுடைய, தலையுயர்த்தி…….. நேர்கொண்ட பார்வையோடு, நமது கண்களைப் பார்க்கிறார்கள். தாங்கள் எவ்வாறு, தற்சார்புடையவர்களாக ஆகி வருகிறார்கள் என்பதை, நமக்குத் தெரிவிக்கிறார்கள்.
இன்றைய நிலையில், பெண்கள் இராணுவத்தில், இணைந்து பணியாற்றி வருகின்றார்கள், அதிலே நிரந்தரமான அங்கம் வகிக்கின்றார்கள். அவர்கள் தங்களுடைய தலையை நிமிர்த்தி நடை போடுகிறார்கள், நேர்கொண்ட பார்வையாக….. நம்மைப் பார்த்து, நாடு பாதுகாப்பான, கரங்களில், இருக்கிறது என்ற நம்பிக்கை அளிக்கிறார்கள்.
இன்று, பாதுகாப்பின்மை சுகாதாரக் குறைவை சந்தித்து வந்த, மிக ஏழ்மை நிலையில் இருக்கும் பெண்கள், இன்று பத்து கோடிக்கும் மேற்பட்ட, பாதுகாப்பான சுகாதாரமான, கழிப்பறைகளால் பயனடைந்திருக்கின்றார்கள். அவர்கள் இனியேதும் சிரமங்களை அனுபவிக்க வேண்டியதில்லை. அவர்கள் எல்லோரும் தங்களுடைய தலைகளை, நிமிர்த்தி நடக்கலாம்.
அனைவரின் கண்களையும் நேருக்கு நேராகப் பார்க்கலாம். இதைத் தானே மஹாகவி பாரதியார், அன்று கண்டார். இது தான் புதிய இந்தியாவின் பெண்களின் சக்தி. அவர்கள் தடைகளையெல்லாம் தகர்த்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இதுதான் புதிய இந்தியா பாரதிக்கு அளிக்கும், தூய நினைவாஞ்சலிகள்.
நண்பர்களே, மஹாகவி பாரதிக்கு நன்கு தெரிந்திருந்தது, அதாவது பிளவுபட்ட, எந்த ஒரு சமூகமும், வெற்றி பெறவே முடியாது என்பது. அதே வேளையிலே, சமூக ஏற்றத்தாழ்வுகளைக், கண்டு கொள்ளாத, சமூகக் கேடுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாத, வெறுமைகள் நிறைந்த, அரசியல் சுதந்திரத்தின், பயனில்லா நிலை பற்றியும், தன் கவிதைகளில் எழுதினார்.
அவர் கூறுவதை நான், மேற்கோள் காட்டுகிறேன். இனியொரு விதி செய்வோம், அதை எந்த நாளும் காப்போம். தனியொரு மனிதனுக்கு, உணவிலையெனில், ஜகத்தினை அழித்திடுவோம். இதன் பொருள், இனி நாம், ஒரு விதியினைச் செய்வோம். அதன்வழியே என்றும் நடப்போம். எந்தவொரு மனிதனாவது பட்டினி கிடப்பானேயானால், இதற்குக் கழுவாய் உலகம் தன் வலியாலும், அழிவாலும் தான் தேட முடியும்.
ஒவ்வொரு தனிமனிதனுடைய, அதிகாரமளித்தலுக்கு நாம், அர்ப்பணிப்போடும் ஒன்றுபட்டும், செயல்பட வேண்டும் என்பதற்கு, அவரது கற்பித்தல்கள் பலமானதொரு நினைவூட்டி. அதுவும் குறிப்பாக, பரம ஏழைகள், மற்றும் ஒதுக்கப்பட்டவர்கள்.
நண்பர்களே, பாரதியிடமிருந்து…….. நமது இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம். நம் நாட்டில் உள்ள, அனைவரும் அவர் எழுத்துக்களைப் படிக்க வேண்டும், அவற்றால் உத்வேகம் பெற வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
பாரதியாரின் அற்புதமான செய்தியின், பரப்புரையில் அரும்பணியாற்றி வரும், வானவில் கலாச்சார மையத்திற்கு, என் பாராட்டுக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆக்கப்பூர்வமான, முதிர்சிந்தனைகள் புரியப்பட்டு, இந்தியாவை புதிய எதிர்காலம் நோக்கி, இந்தக் கொண்டாட்டம், இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. தேங்க்யூ, மிக்க நன்றி.
தமிழாக்கம்: ராமஸ்வாமி சுதர்ஸன், (அகில இந்திய வானொலி, சென்னை)