
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
59. சிங்கம் அரசன் ஆனது எங்ஙனம்?
சுலோகம்:
நாபிஷேகோ ந சம்ஸ்கார: சிம்ஹஸ்ய க்ரியதே ம்ருகை:|
விக்ரமார்ஜிதராஜ்யஸ்ய ஸ்வயமேவ ம்ருகேந்த்ரதா ||
பொருள்:
சிங்கத்தை காட்டில் இருக்கும் பிற விலங்குகள் அனைத்தும் சேர்ந்து ராஜாவாக பட்டாபிஷேகம் செய்யவில்லை. எந்த ஓட்டெடுப்பும் நடந்து சிங்கத்தைக் காட்டு அரசனாக அறிவிக்கவில்லை. தன்னுடைய பராக்கிரமத்தால் சிங்கம் காட்டிற்கு அரசனாக புகழப்படுகிறது.
விளக்கம்:
சமுதாயத்தில் சிலர் அவர்களுக்கு உள்ள தனித் திறமைகளின் காரணமாக தலைவர்களாக அறியப்படுவர்.
உலக நாடுகளில் அமெரிக்கா சூப்பர் பவராக எவ்வாறு பெயர் பெற்றது? பொருளாதார வல்லமை, படைபலம் காரணமாக தானாகவே அந்த பெயரை பெற்றுக் கொண்டது.
யார் சிங்கத்தை காட்டரசனாக தேர்ந்தெடுத்தது? எந்த சிறப்பான குணங்களைக் கண்டு சிம்மாசனம் ஏற்றினார்கள்? அதற்கிருக்கும் சக்தி, சாமர்த்தியங்களால் சிங்கம் விலங்குகளின் அரசனாக போற்றப்படுகிறது.
அரசனுக்கு இருக்கவேண்டிய பராக்கிரம இயல்புகளின் முக்கியத்துவத்தை எடுத்து இயம்பும் சுலோகம் இது. தலைமைப் பண்புகள் சிலருக்கு பிறவியிலேயே வருகிறது. அறிவுத் திறனால், உடல் வலிமையால் தலைவர்களாக ஆவார் சிலர்.
பள்ளியில், கல்லூரியில் சிலர் சிறு வயதிலிருந்தே தலைமைப் பண்புகளால் பிறரைக் கவர்வார்கள். தலைமை பண்பு என்பது பிறரிடம் கேட்டுப் பெற்று வருவதல்ல. பராக்கிரமத்தால் ஈர்ப்பது.
பொதுமக்களிடமிருந்து மதிப்பை கெஞ்சிக் கேட்டுப் பெற முடியாது. கேட்காமலேயே வாய்ப்பது. தனக்குள்ள சாமர்த்தியத்தால் மக்களின் பாராட்டைப் பெற்று தலைவர்களாக ஆனவர்கள் ஆளத் தகுந்தவர்கள்.