
ஒரு வழியாக, ரயில் பயணிகள் சந்தித்து வந்த நீண்ட நாள் பிரச்னைக்கு இந்தியன் ரயில்வே ஒரு தீர்வைக் கண்டுள்ளது. ரயில் பெட்டிகளில் படுக்கை வசதி கொண்ட லோயர் பெர்த் வடிவமைப்பில் இப்போது புதிய வடிவமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, இனி சைட் லோயர் பர்த் பயணிகள் மற்ற படுக்கை வசதிகளைப் போல் இதையும் உணரலாம்.
ரயில் பயணிகளின் வசதிக்காக, இந்திய ரயில்வே நிர்வாகமும் சில முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறது. படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்தும், டிக்கெட் RAC என்று வந்துவிட்டால், அந்த பயணிகளுக்கு சைட் லோயர் பெர்த் இரு இருக்கைகள் ஒதுக்கப் படும். இதில் அமர்ந்து பயணிப்பது போல் இருக்கும். பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும் பட்சத்தில் அமர்ந்து பயணிக்கும் சீட்டை மடித்து, படுக்கும் வசதிக்குக் கொண்டு வரலாம். ஆனால் இந்த சைட் லோயர் பெர்த்துகளின் நடுவில் எந்தப் பிடிமானமும் இருக்காது. இரண்டு இருக்கைகளுக்கு மத்தியில் இடைவெளி இருப்பதால், பயணிகளுக்கு அதில் படுத்துக் கொள்வதில் சிரமமாக இருக்கும்.
தற்போது இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சைடு லோயர் பெர்த்தில் மடித்து விட்டு, அதன்மீது மற்றொரு பெர்த் போடப்படுகிறது. இதனால் இடைவெளியும் இருக்காது, நடுவில் பிடிமானம் இல்லை என்ற சிரமமும் இருக்காது.
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இது குறித்த விளக்கப் பதிவினை தனது அதிகாரபூர்வ அலுவல் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.