
தொடர்ந்து சில வருடங்களாக தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஹிந்து விரோத கருத்துக்களை தெரிவித்தும், தெரிவிப்பவர்களை ஊக்குவித்தும் வருவது குறித்து விமர்சித்து கொண்டேயிருக்கிறோம்.
திருச்சியில் நடந்த வி சி க மாநாட்டில் ஹிந்து மதத்தை வேரறுப்போம் என்று ஸ்டாலின் அவர்கள் கூறியதும், சில மாதங்களுக்கு முன்னர் தி மு க வை சேர்ந்த நிர்வாகிகள் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி முருக கடவுளையும், தமிழ் பெண்களையும் இழிவாக பேசிய கறுப்பர் கூட்டத்தை கண்டிக்காமல் ஸ்டாலின் அவர்கள் மௌனம் காத்ததும், வெளிநாட்டவர் யாரோ எழுதிய மனுநூல் குறித்து திருமாவளவன் அவர்கள் மனுஸ்மிரிதியை அவதூறாக பேசியதற்கு வாய்மூடி இருந்ததும், இரு தினங்களுக்கு முன்னர் கிருஸ்துவ மத போதகராக தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் எஸ் ரா சற்குணம் என்ற ஒரு அற்ப பதர், பிரதமரை இழிவு படுத்தி பேசிய போது அமைதியாக கேட்டு ரசித்ததும், கிருஸ்துமஸ் விழாவில் கலையரசி நடராசன் என்ற ஒரு பெண்மணி ஹிந்து மதம் குறித்து அவதூறாக பேசியபோது அதை ஸ்டாலின் அவர்கள் ஆர்வமாக கேட்டு கொண்டிருந்ததும், தேர்தல் வெற்றிக்காக, ஹிந்துக்களுக்கு எதிராக தி மு க செயல்படுவதை உறுதி படுத்துகிறது. ஹிந்து நம்பிக்கைகளுக்கு எதிராக பேசுவதன் மூலம், சிறுபான்மை சமுதாயத்தினரின் நம்பிக்கையை பெறலாம் என்ற மலிவான மத வாத அரசியலை தி மு க முன்னெடுப்பது அருவருப்பான அதே நேரத்தில் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செய்லபாடுகள்.
ஓட்டுக்காக, அரசியல் அதிகாரத்திற்காக தன் மதத்தை அவமதிப்பதை வேடிக்கை பார்ப்பது ஒரு எதிர்க்கட்சி தலைவருக்கு அழகா? பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டு இரு மதத்தினருக்கிடையே மோதல்களை உருவாக்க முனைவதும், அதன் மூலம் அரசியல் லாபமடைய துடிப்பதும் அரசியல் அராஜகம் தானே?
மேலும், தொடர்ந்து தி மு க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஹிந்து விரோத போக்கை கண்டித்து, பாஜகவினர் தொலைக்காட்சி விவாதங்களில் கடுமையாக விமர்சனங்களை செய்து நிலையில் அந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் அஞ்சி நடுங்கி, பதறி, பயந்து, பாஜகவினர் பங்கேற்கும் விவாதங்களில் பங்கேற்க தி மு க கூட்டணியினர் மறுத்து வருவதும் கண்கூடு.
தி மு க வை பொறுத்த வரை, ஹிந்து விரோதமாக பேசி, சிறுபான்மையினரை தாஜா செய்ய வேண்டும். அதே சமயம் விவாதங்களில் பங்கேற்றால், பாஜக வினர் தி மு கவினரின் ஹிந்து விரோத போக்கை வெளிப்படுத்துவதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதால் பாஜகவினர் தனிப்பட்ட முறையில் தங்களை தாக்குவதாக சொல்லி ஒரு நாடகத்தை அரங்கேற்றினர்.
இதில் சில ஊடகங்கள் உண்மையை உணர்ந்தாலும், சில ஊடகங்களில் தி மு க வினரின் அழுத்தத்தின் தாக்கத்தை நம்மால் காண முடிகிறது. சில தொலைக்காட்சிகள், பாஜகவினர் பங்கேற்காத விவாதங்களில், வலது சாரி சிந்தனையாளர்கள் என்ற அடைமொழியோடு சிலரை கலந்து கொள்ள செய்து திமுகவினரை அழைத்து விவாதம் செய்கிற அதே நேரத்தில், பாஜகவினர் கலந்து கொள்ளும் விவாதங்களில், இடது சாரி சிந்தனையாளர்கள் என்ற அடைமொழியோடு கூடியவர்களை அழைக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
எது எப்படியானாலும், பாஜகவினரின் கேள்விகளுக்கு தி மு க மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பயந்து விவாதங்களை தவிர்த்து வருவது பாஜகவுக்கு வெற்றியே.
ஆனால், ஊடகங்கள் தி மு க கூட்டணியினரின் உள்நோக்கத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவதன் மூலம் மட்டுமே நடுநிலையாக செயல்படுவதாக மக்களின் நம்பிக்கையை பெற முடியும் என்பதை உணரவேண்டும்.
( தி மு க வின் இந்த முடிவுகள் மற்றும் அழுத்தங்களின் பின்னணியில் பிரஷாந்த் கிஷோரின் IPAC உள்ளது என நம்பத்தகுந்த ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன)
- நாராயணன் திருப்பதி
(செய்தி தொடர்பாளர், பாஜக.,)