
வரும் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அதிமுக.,வினால் ஏற்கெனவே அறிவிக்கப் பட்டு விட்டார். ஆனால் தற்போது அந்தக் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க தரப்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக., தலைமையே அறிவிக்கும் என்று கருத்து தெரிவித்து வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, அதிமுக., பாஜக., பாமக., தேமுதிக., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி அமைந்தது. அந்தக் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளின் போது, அதிமுக., தரப்பு தன்னிச்சையாகவே செயல்பட்டது. கூட்டணியில் கலந்து ஆலோசிக்காமல், அதிமுக., தரப்பே பாமக.,வுக்கு எத்தனை இடங்கள் என்று பேசியது.

பாமக.,வுடன் முதல் உடன்படிக்கை எட்டப் பட்டதால், தேமுதிக.,வுக்கு சரியான இடங்கள் ஒதுக்க முடியாமல் பாஜக., சமரசம் செய்தது. அந்த இடைப்பட்ட நேரத்தில், திமுக.,வுடன் பேரம் பேசியது தேமுதிக.,!
கூட்டணி குறித்து முடிவுகளை அறிவிக்கலாம் என்று சென்னைக்கு வருவதற்காக திட்டம் இட்டிருந்த பாஜக.,வின் தலைவர் அமித் ஷா, அப்போது தமிழகத்தில் அதிமுக., மேற்கொண்டிருந்த கூத்துகளால் மனம் நொந்து, கோபப்பட்டு, தனது சென்னை பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்தார். கூட்டணி திட்டமிடல்கள் அதிமுக.,வின் அவசரக் குடுக்கைத் தனத்தால் சீர்கெட்டதை நினைத்து நொந்து போய் வேறு வழியில்லாமல் பியூஷ் கோயலை அனுப்பி ஏனோதானோவென்று கூட்டணிப் பேச்சுகளை தொடருமாறு அனுப்பி வைத்தார்.

அதன் படி தேமுதிக.,வுக்கான இடங்கள் குறித்து விஜயகாந்துடன் பேசி, கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய வேலையை பியூஷ் கோயல் மேற்கொண்டார். ஆனாலும் கூட்டணிக்குள் முரண்பாடுகள் தலையெடுத்தன. ஜெயலலிதாவைப் போல் கட்டுக் கோப்பாகக் கட்டளை இட்டு காரியம் சாதிக்கும் தலைமைப் பண்பு இல்லாத எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும்., ஆளுக்கொரு பக்கம் இழுத்துக் கொண்டு சென்றார்கள். போதாக்குறைக்கு, அதிமுக.,வில் இருந்த திமுக.,வின் பி டீம், இன்னொரு அமமுக.,வின் பி டீம் ஆன சசிகலா அடிவருடிகள் என உள்ளடி அரசியல் செய்ய, கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லாமல் போனது.
பாஜக.,வுக்காக அதிமுக., தொண்டர்களோ கட்சியினரோ எந்த விதத்திலும் வேலை செய்ய வரவில்லை. தேமுதிக., பாமக., ஒத்துப் போகவில்லை. விளைவு கூட்டணி படுதோல்வி அடைந்தது. ஓபிஎஸ்.,ஸின் தனிப்பட்ட கவனிப்பில், தேனியில் அவர் மகன் மட்டும் வெற்றி பெற, அந்த ஒருவருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம்கொடுத்து விடக் கூடாது என்பதில், எடப்பாடி தரப்பு கவனமாக இருக்க, மீண்டும் அதிமுக.,வுக்குள்ளேயே புகைச்சல் பெருக்கெடுத்தது!

இந்த நிலையில், தற்போது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால், சாணக்கியத் தனங்களும் கூடவே கூட்டணிப் பேச்சு, இடங்கள், தொகுதிகள், கூட்டணியில் ஒருங்கிணைப்பு என பல்வேறு திட்டமிடல்கள் இருந்தாக வேண்டிய சூழல். ஆனால், அதிமுக., தலைமைகள் வழக்கம்போல், தன்னிச்சையான முடிவுகளால் காலைவாரும் கட்சிக்காரர்களை வைத்துக் கொண்டு தள்ளாடி வருகின்ற நிலையில், அமித் ஷா தன் கவனத்தை செலுத்தியுள்ளார்.
கடந்த மாதம் சென்னை வந்த அவர், தனது முக்கிய எதிரி திமுக., என்பதைப் பதிய வைத்தார். அந்தக் கூட்டத்தில், அதிமுக.,வே முந்திக் கொண்டு பாஜக.,வுடன் கூட்டணி தொடர்கிறது என்று சொன்னது. ஆயினும் அமித் ஷா அதுகுறித்து முடிவாக ஏதும் சொல்லவில்லை.

இந்த நிலையில், அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி தான் என்று அதிமுக., தன்னிச்சையாக அறிவித்ததில் இருந்து, கூட்டணி என்பதன் வரைமுறைகளை மீறி, மீண்டும் பழைய பாணியில் செயல்படுவது உறுதியாகத் தெரிந்தது.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன், “அ.தி.மு.க., பாஜக., கூட்டணி தொடரும். ஆனால், யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பாஜக., அறிவிக்கும்” என்று பேசினார், இது ஊடக விவாதத்தைக் கிளப்பி பாஜக., அதிமுக., கூட்டணிகளுக்குள் குழப்பமா என்ற கேள்வியை எழுப்பி அந்தத் தோற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, இன்று சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை பாஜக., ஏற்றுக்கொண்டதா என்று, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேஹரிடம் ஊடகத்தினர் கேட்டனர். ஆனால், உஷாரான பிரகாஷ் ஜாவ்டேகர், திமுக., பின்னணியில் இயங்கும் ஊடகத்தினரின் அரசியல் சிண்டுமுடிப்பு சித்துவேலைகளை நன்கு அறிந்திருந்ததால், அந்தக் கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.
அதுசரி… இவருதான் எங்க முதல்வர் வேட்பாளர். ஆனா அதை அவரே சொல்லக் கூடாது, நாங்கதான் சொல்வோம் என்ற ரீதியில் பாஜக., சொல்ல வருகிறதா? அல்லது தன்னை முன்னிலைப் படுத்தி விளம்பரங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஓபிஎஸ்., ஏதாவது வேலை காட்டிக் கொண்டிருக்கிறாரா? என்று புரியாமல், மெய்யாலுமே மண்டையைப் போட்டு உருட்டிக் கொண்டிருக்கிறார்கள், தங்களின் எஜமானர்கள் கேட்கச் சொன்ன கேள்விகளைக் குறித்துக் கொண்டு துண்டுச்சீட்டுகள் சகிதமாக அடுத்தடுத்த ‘பிரஸ் மீட்’களை எதிர்நோக்கியபடி ‘அந்த’ ஊடகவியலாளர்கள்!