
மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியை நேரில் கண்டு மகிழ்ந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல். அப்போது அவர், தமிழக மக்களோடு இருக்க வேண்டியது எனது கடமை நான் தமிழக மக்களோடு இருக்கிறேன் என்றார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிகட்டுப் போட்டியை காண்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் தனி விமானம் மூலமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிக்கு வந்து போட்டியை ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தார்.
இதை அடுத்து போட்டியில் சிறப்பாக காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணயங்களை வழங்கினார். இதனிடையே ராகுல் வந்த போது, ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தடை செய்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு, இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு மதுரைக்கு ஜல்லிக்கட்டு காண ராகுல் வருகிறார் என்று கோஷமிட்டு, இந்து முன்னணி மற்றும் பாஜக.,வைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
ராகுல் வருகையை அடுத்து காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ராகுலுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி , நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர் ஆகியோரும் இருந்தனர்.
பின்னர் விழா மேடையில் பேசிய ராகுல், தமிழக பாரம்பரியம் மிகுந்த இந்த விழா ஏற்பாடுகளைப் பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர், தமிழர் கலாச்சாரம் தமிழின் சிறப்பு இந்தியாவிற்கு சிறப்பானது அதனை கொண்டாட வந்திருக்கிறேன்.
தமிழ்மொழியை, தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து வருபவர்களுக்கு எனது நன்றி. தமிழக மக்களோடு முன்னிற்க வேண்டியது எனது கடமை. நான் அவனியாபுரத்துக்கு, தமிழர்களின் கலாச்சாரம் உணர்ச்சிகளை நேசிக்க வந்துள்ளேன்.
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்றார்.