
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் புலியிடம் இருந்து கண் இமைக்கும் நொடியில் தப்பிய பள்ளி மாணவி. மயங்கி விழுந்ததால் உயிர் தப்பினார்.
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா டி செட்டிகெரே பகுதியை வசிப்பவர் கணேஷ். இவரது பேத்தி சஷ்மா. 2ம் ஆண்டு பியுசி படித்து வருகிறார். நேற்று காலை பள்ளியில் பரிட்சை நடந்தது. அதில் பங்கேற்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் புலி ஒன்று இவரை கடந்து சென்றது. சஷ்மா தான் புலியை பார்த்தார்.
ஆனால் புலி சஷ்மாவை பார்க்கவில்லை. இதில் அதிர்ச்சி அடைந்த சஷ்மா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அதிர்ஷ்டவசமாக புலி அங்கிருந்து, காபி தோட்டத்திற்கு சென்றுவிட்டது
இதனால், சஷ்மா உயிர் தப்பினார். இதையடுத்து அந்த வழியாக பள்ளிக்கு சென்ற மாணவர்கள், ஊர் பொதுமக்கள் உதவியுடன் சஷ்மாவை கோணி கொப்பா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள்.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வனப்பகுதியில் பார்வையிட்டு அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்கள். அதில் புலிகள் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
முன்னதாக கிராமத்திற்குள் புகுந்த புலிகள், ஆடு, மாடுகளை வேட்டையாடிவிட்டு சென்றுள்ளன. தற்போது பள்ளி மாணவர்கள் செல்லும் பாதையில் புலிகள் நடமாடியிருப்பதால், மாணவர்கள் மத்தியில் அச்சம் எழுந்தது.. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற வனத்துறையினர் புலியை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.