4 ஆண்டுகால பெங்களூரு சிறைவாசத்துக்கு பின் செய்தியாளர்களை முதல் முறையாக சந்தித்த போதே அதிமுக தலைமை அலுவலகம், ஜெ. நினைவிட விவகாரங்களில் அதிரடியாக கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் அரசியல் களத்தில் இனி எப்போதும் பரபரப்புதான் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் சசிகலா.
வாணியம்பாடி டோல்கேட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். 4 ஆண்டு சிறைவாசத்துக்குப் பின்னர் சசிகலா நடத்திய முதல் பிரஸ் மீட்.
எடுத்த எடுப்பிலேயே கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது; பீனிக்ஸ் பறவை போல அதிமுக மீண்டு வந்திருக்கிறது. புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம் என அதிரடி காட்டினார். மேலும் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் அடிமை; அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணியமாட்டேன் என்றும் பொடி வைத்து பேசினார் சசிகலா.
இதன்பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார் சசிகலா. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என பகிரங்கமாக அறிவித்தார். அதேபோல் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது குறித்த கேள்விக்கு எதற்காக இதை செய்தார்கள்? என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்றார். மேலும் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் சசிகலா கூறியிருக்கிறார்.
சசிகலாவின் பிரஸ் மீட்டை வைத்து பார்த்தால் அதிமுகவை கைப்பற்றும் அதிரடிகளை சசிகலா மேற்கொள்வார் என்றே தெரிகிறது. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அதிரடியாக செல்லவும் வாய்ப்பிருக்கிறது என்பதும் அவரது பேட்டியில் தெரிகிறது.
4 ஆண்டு சிறைவாசத்தால் சசிகலா எந்த பாதிப்புக்கும் உள்ளாகாமல் அதே அதிமுக பொதுச்செயலாளர் கோதாவுடன் தமிழகம் திரும்பியிருக்கிறார் என்பதைத்தான் வாணியம்பாடி பிரஸ் மீட் காட்டுகிறது.