
தமிழக சட்ட மன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், மதுரை நகரில் வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டுப் போயிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக அடுக்கு மாடிக் குடியிருப்பு வளாகங்களில் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக புகார்கள் கூறப்பட்டுள்ளன.
அக்ரி டாக்டர் இதழாசிரியர் வாசுதேவன் தனக்கு இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, நம்மிடம் கூறியவை…
“தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் கருப்பு வெள்ளை வாக்காளர் அட்டையை வண்ண அட்டையாக மாற்றுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த போது தான் அந்த அதிர்ச்சி ஏற்பட்டது. ஆம், வாக்காளர் பட்டியலில் எனது பெயர் விடுபட்டிருந்தது.
சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு உடன் சென்று முகாமின் போது, இது பற்றி விசாரி்த்த போது அங்கிருந்த பெண் தேர்தல் அலுவலர், தான் தான் எங்கள் குடியிருப்பு வளாகத்திற்கு சரிபார்ப்பு பணிகளுக்காக வந்திருந்ததாகவும், நலச்சங்க அலுவலகத்தில் இதற்கான பணிகள் நடைபெற்ற போதும், எவ்வாறு உங்கள் பெயர் விடுபட்டது என தெரியவில்லை என்றார்.
கடந்த 40 ஆண்டுகளாக தவறாமல் வாக்கு செலுத்தி வரும் நான் கடந்த 20 வருடங்களாக ஒரே முகவரியில் குடியிருந்து வருகிற போதும், இவ்வாறு நிகழ்ந்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது நான் சரிபார்த்திருக்க வேண்டும் என்றாலும், தொடர்ந்து வாக்குரிமையை பயன்படுத்தி வரும் நிலையில், இதனை எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.
எனவே, இதனை பெரிதுபடுத்தவில்லை என்றாலும், குடியிருப்பு அலுவலகத்தை சார்ந்தவர்களோ அல்லது தேர்தல் அலுவலரோ காட்டிய அலட்சியமே இதற்கு காரணம் என்பதை என்னால் மறுக்க இயலாது. திட்டமிட்டு செய்யப்பட்டது என சொல்ல முடியாது என்றாலும், எங்கள் வளாகத்திலேயே பலருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான சாத்தியமே இல்லை என்று சொல்லவும் முடியாது.
முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் எங்கள் வளாகத்திலேயே வாக்கு செலுத்த இயலாததால் கதறி அழுத நிகழ்வும் உண்டு. இன்று காலை நான் எழுந்த போது எனது மனைவி வாங்க செல்லாத ஒட்டு என்று அழைத்தார். கனத்த இயத்ததுடன் நான் சொன்னேன், அம்மா இது செல்லாத ஓட்டு இல்லை, இல்லாத ஓட்டு. இல்லாமல் செய்யப்பட்ட ஓட்டு. வேறு என்ன சொல்ல.
வரும் காலங்களில், ஒரு பத்திரிக்கையாளராக எனது வேண்டுகோள், வாக்குரிமையயை பறிக்கத்தக்க இத்தகைய செயல்களை தேர்தல் கமிசன் கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுக்க வேண்டும் என்பதே”.