ஸ்ரீ டிவியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோக்கள் அனைத்தும், ஆதாரங்கள் அடிப்படையில் வெளியிடப்பட்டவையே என்று, ஸ்ரீ டிவி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஸ்ரீ டிவி நிர்வாகத்தின் சார்பில், ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
எங்கள் ஸ்ரீ டிவி மீது நடவடிக்கை கோரி, தேர்தல் ஆணையத்தில் தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி புகார் கொடுத்துள்ளார். அதில் தி.மு.க.,வுக்கு எதிராக, ஆதாரபூர்வமற்ற வீடியோக்களை வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் ‘டிவியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோக்கள் அனைத்தும், ஆதாரங்களின் அடிப்படையிலேயே வெளியிடப்பட்டன. தி.மு.க.,வால் நடத்தப்பட்ட குற்றங்களை, ஆதாரங்களுடன் கூறியதற்காக, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், அதை செய்த தி.மு.க., மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்குமா என்பதே எங்கள் கேள்வி.
எங்கள், ‘டிவி’ மீது தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தலாம் என்ற செய்தி வருகிறது. தாக்குதல் நடத்தினாலும் சொன்ன விஷயங்களில் இருந்து, எங்கள் ‘டிவி’ பின்வாங்காது.
எங்கள் டிவியின் தாரக மந்திரமே உண்மை நின்றிட வேண்டும் என்பதுதான். ஆதலால், தி.மு.க.,வின் வன்முறைக்கும், அழுத்தங்களுக்கும் அடிபணியாது; அனைத்து எதிர்ப்புகளையும் மீறி போராடும்; வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திமுக.,வின் மீது பொய்யுரை பரப்புவதாக ஸ்ரீடிவி., நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக.,வின் ஆர்.எஸ்.பாரதி, தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார்.