
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் உள்ள கோவில்களில் பங்குனிப் பொங்கல் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும், பக்தர்களும் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ராஜபாளையம் பகுதியில் ஆண்டு தோறும் சித்திரை வெண்குடை திருவிழா, பெரிய மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, திரௌபதி அம்மன் கோவில் பொங்கல் விழா, ராஜூக்கள் சமுதாயத்தினரின் சித்திரை திருவிழா என நான்கு திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு திருவிழாக்கள் நல்லமுறையில் நடைபெறும் என்று, எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்திருப்பதன் காரணமாக, திருவிழாக்கள் நடத்துவதற்கு அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டும் திருவிழாக்கள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திருவிழாக்கள் நடத்துவது குறித்து சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பங்குனிப் பொங்கல் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பல இடங்களில் நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, கோவில்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது. விழாக்கள் கோவிலுக்குள் மட்டும் நடத்த வேண்டும். அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
கோவிலைச்சுற்றி மக்கள் கூட்டமாக கூடுவதற்கும், சாமி ஊர்வலங்கள் நடத்துவதற்கும், பொங்கல் வைப்பதற்கும், அக்னிசட்டி ஊர்வலங்கள் நடத்துவதற்கும், தேரோட்டம் நடத்துவதற்கும் அனுமதி கிடையாது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். திருவிழாக்களுக்கு அரசு தடை அறிவித்திருப்பது பொதுமக்களிடம் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது