
மதுரையில் தனி ஆளாக கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் 72 வயது முதியவருக்கு குவியும் பாராட்டுகள் – அரசு உத்தரவின்படி கொரோனா தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல்!
உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று 2-ஆம் அலையாக வேகமாக பரவி வரும் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டி தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாட்டுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டு அமல் படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மதுரையில் உள்ள ஆரப்பாளையம், தத்தனேரி, செல்லூர், எஸ்எஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கூலித் தொழிலாளிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் பலரும் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்து வந்துள்ளனர்.
இதனையடுத்து, மதுரை ஆர்ப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற முதியவர் தன்னால் இயன்றவாறு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசங்களை இலவசமாக இளைஞர்கள் மற்றும் கூலி தொழில் தொழிலாளர்களுக்கு வழங்கிவருகிறார்.
தொடர்ந்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்திவரும் முதியவரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.