
கொரொனா தடுப்பூசி…
ஏன் போட்டுக்கொள்ள வேண்டும்?
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –
நான் முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன். பிறந்த ஆண்டு 1961. (நடிகர், சமூகப் பணியாளர் திரு விவேக் அவர்களும் 1961இல் பிறந்தார் என்பதால் இதைச் சொல்லியுள்ளேன்) நாளை கொரொனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளப் போகிறேன்.
இந்த சமயத்தில் கோவிட் தடுப்பூசிகளினால் ஆங்காங்கே தடுப்பூசி சார்ந்த மரணங்கள் நிகழ்கிறது என்கிறார்களே இதை எப்படி அணுகுவது?
நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் நம் மனம் அதன் சாதக பாதகங்களை ஆராயும். எடுத்துக்காட்டாக நான் என்னுடைய இரு சக்கர வாகனம் மூலமாக அலுவலகம் செல்லக் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு தொலைக்காட்சி சேனலில் சாலை விபத்தில் மரணம் அடைந்தவர் ஒருவர் பற்றிய செய்தியைக் காண்பிக்கிறார்கள். அதனுடன் இந்தியாவில் சாலை விபத்தில் சிக்கி ஒருவர் உயிர் இழக்கும் வாய்ப்பு பத்து லட்சம் பேர்களில் 113.5 என்ற அளவில் இருக்கிறது என்பதையும் சொல்கிறார்கள்.

இப்போது நான் அலுவலகத்துக்குச் செல்வதா வேண்டாமா? இது நான் எடுக்க வேண்டிய ரிஸ்க். அதனை அறிந்தே நான் என்னுடைய அந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இதில் என்னுடைய எதிர்காலம் அடங்கியுள்ளது. அதுபோல இந்தியாவில் இதுவரை தடுப்பூசி பெற்றவர்கள் (மார்ச் 31,2021 வரை) 6.3 கோடி மக்கள். இவர்களிடையே தடுப்பூசி பெற்ற 28 நாட்களுக்குள் 180 மரணங்கள் நிகழ்ந்தன. தடுப்பூசி பெற்றவர்களுள் மரணம் நிகழ வாய்ப்பு பத்து லட்சம் பேர்களில் 3 என்ற அளவில் இருக்கிறது.
கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி கண்டறியப் பட்டவர்களில் மரணம் நிகழ வாய்ப்பு பத்து லட்சம் நோயாளிகளின் 12800 பேர் என்ற அளவில் இருக்கிறது. இப்போது இரண்டாம் அலை வெகு ஆக்ரோஷமாக பரவி வரும் நிலையில் மஹாராஷ்ட்ரா, குஜராத், சட்டிஸ்கர், பஞ்சாப், டில்லி, பெங்களூர் ஆகிய இடங்களில் ஒரு ஆக்சிஜன் படுக்கையில் இருவர் மூவர் படுத்திருக்கும் நிலையில் மருத்துவமனைகளுக்கு வெளியே சாரை சாரையாக ஆம்புலன்ஸ்கள் படையெடுத்த வண்ணம் இருக்கின்றன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மயானத்தில் எரியூட்டக்கூட இடமின்றி மக்கள் காத்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன. ஒரு இடத்தில் மயானத்தில் எரியூட்டப் பயன்படும் இரும்புப் பலகை எரிந்து உடைந்து போய்விட்டது என்று செய்தி ஒன்றினை நான் கேள்விப்பட்டேன்.
இப்படி இருக்கும் போது நம் மனம் கொரொனா தடுப்பூசியால் உண்டாக க் கூடிய சாதக பாதங்களை ஆய்வு செய்தால் பத்து லட்சம் பேரில் அரிதினும் அரிதாக மூன்றே மரணங்களை விளைவிக்கும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதா? அல்லது வேண்டாமா?

இன்னொரு பக்கம் பத்து லட்சம் பேருக்கு பரவினால் 12800 பேருக்கு மரணத்தை உருவாக்கும் கோவிட் நோய் வருமே. அதிலும் முன்பை விட வேகமாக பரவி வரும் இந்த இரண்டாம் அலையில் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக இருக்கிறதே என்ன செய்யலாம்?
மக்களே நீங்களே முடிவு செய்யுங்கள். நான் தடுப்பூசி செலுத்திக் கொள்ளப் போகிறேன். ஒருவேளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்து விட்டால் யாரும் தடுப்பூசியைக் குற்றம் சொல்லாதீர்கள். எனக்கு ஏற்கனவே பல உடல் பாதிப்புகள் உள்ளன. அவற்றிற்கு மருந்து மாத்திரை சாப்பிடுகிறேன். அதுகூட காரணமாக இருக்கலாம்.
தடுப்பூசிகளின் விளைவால் இஸ்ரேல் தேசம் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. முதியோர்களிடையே நோய் தொற்றுப்பரவலையும் தீவிர கொரோனாவையும் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. பிரிட்டனில் தடுப்பூசி மூலம் நோய் தொற்றுப்பரவலை 67% குறைத்திருக்கின்றனர். அமெரிக்காவில் தடுப்பூசிகளின் விளைவால் நான்காம் அலை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இத்தகைய செய்திகள் உள்ளபடி நம்பிக்கையை அளிக்கின்றன
சமீபத்தில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் 83 வயதான திரு. துரைமுருகன் அவர்கள் இரண்டு தடுப்பூசியையும் பெற்றதால் சிறப்பாக குணமாகி வீடு திரும்பியிருப்பதையும் காண முடிகின்றது. இதுவரை 12 கோடி மக்களுக்கு மேல் தடுப்பூசி வழங்கப்பட்டு இருக்கின்றது
இந்த பக்கவிளைவுகள் நிகழ்வுகளை இந்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
எங்கும் தடுப்பூசியினால் கொத்து கொத்தாக மக்கள் மடிந்ததாகவோ குறிப்பிட்ட ஊரில் ஊசி போட்ட அனைவரும் இறந்ததாகவோ குறிப்பிட்ட பேட்ச் தடுப்பூசியினால் அதிகமாக மரணங்கள் நேர்ந்ததாகவோ செய்திகள் இல்லை.
போலியோ சொட்டு மருந்து போடும்போது கூட அந்த மருந்தால் குழந்தைகள் இறந்ததாக செய்தி ஊடகங்கள் உடனே செய்தி போடுகின்றன. ஆனால் போலியோ சொட்டு மருந்துத் திட்டத்தால் இன்று நாடு போலியோ இல்லாத நாடாக மாறியுள்ளதை நாம் மறக்கக் கூடாது.
பத்து லட்சம் பேரில் 113.5 இறக்க வாய்ப்புள்ள சாலை பயணங்களையே யாரும் நிறுத்துவதில்லை எனும் போது பத்து லட்சம் பேரில் 3 பேர் மட்டுமே இறக்க வாய்ப்புள்ள அதே சமயம் 12,800 பேரை மரணங்களில் இருந்து ஆகுமானவரை காக்கக் கூடிய தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதே சரியென்று படுகின்றது.
எனவே தடுப்பூசிகள் குறித்து பரப்பப்படும் பொய் செய்திகளை விட்டு வெளியே வந்து உண்மைகளை அறிந்து நீங்களே உங்களுக்கு உகந்த முடிவை எடுங்கள். என்னுடைய சிபாரிசு அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்பதே!