செங்கல்பட்டு மருத்துவமனையில் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்து உயிரிழப்பு நிகழ்ந்ததாக பரவிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனா பரவல் அதிகரித்துவரும் மாவட்டம், செங்கல்பட்டு. சென்னைக்கு அடுத்து இருப்பதாலும், சென்னை புறநகர்ப் பகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பதாலும், இங்கே மக்கள் நெருக்கம் அதிகம் என்பதும் காரணம்.
நாளொன்றுக்கு சுமார்1,500 பேர் என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். செங்கல்பட்டு மருத்துவமனையில் மட்டும் கொரோனா நோயாளிகள் சுமார் 500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு 10க்கும் மேற்பட்ட நோயாளிகள் திடீரென உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். உயிரிழந்தவர்களில் கொரோனா நோயாளிகள் யாரேனும் உள்ளார்களா என்பது குறித்த தகவல் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.
இருப்பினும், செங்கல்பட்டு மருத்துவனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும் அதனாலேயே தனது தந்தை உயிரிழந்து விட்டதாகவும் ஒருவர் கூறினார்.
இதை அடுத்து, தகவலறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்து விசாரித்து வருவதாகக் கூறினார். மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், “ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் யாரும் உயிரிழக்கவில்லை; ஆக்சிஜன் விநியோகத்தில் இருந்த கோளாறு சரி செய்யப்பட்டது. உயிரிழந்த 11 பேரில் ஒருவர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் என்று, செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ் விளக்கம் அளித்தார்.