ரெம்டெசிவிர் – பதுக்கி விற்றால் குண்டர் சட்டம் பாயும்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம்
remdesivir
remdesivir

தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி அளிக்கும் படி மருத்துவர்கள் கூறுவதால், இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக அரசின் மருந்து விற்பனை மையங்களில் நாள் கணக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, பலர் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். சில இடங்களில் போலீஸாரின் தேடுதல் வேட்டையில், சில பதுக்கல்காரர்களும் சிக்கியுள்ளனர். மதுரை மருத்துவமனையில் குப்பைக்கூடையில் மருந்தைப் போட்டு, அதனை கடத்திச் சென்ற நபரை மக்கள் பிடித்த வீடியோ வைரலானது.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்…

மக்களின் உயிர் காக்கும் பெரும் பொறுப்பை முதன்மை கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு. அதற்கு நேர் எதிராகச் செயல்படுபவர்களின் போக்கை கடுமையான நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

உலகளாவிய அளவிலும், குறிப்பாக இந்திய ஒன்றியத்திலும் கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி வளையத்தில் இருந்து தமிழகமும் தப்பிக்கவில்லை.

remdesivir crowd
remdesivir crowd – ரெம்டெசிவர் மருந்து வாங்க… சென்னை நேரு மைதானத்தில் குவிந்திருக்கும் கூட்டம்…

நாள்தோறும் அதிகரித்து வரும் நோய்த் தொற்று எண்ணிக்கையையும், இறப்புகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்களுக்கான இந்த அரசு இரவு பகல் பாராது செயல்பட்டு வருகிறது. மேலும் இப்பணியில் அனைவரும் அவரவர் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கேற்ப, நல்லோர் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கி வருகிறார்கள்.

எளிய மக்கள்கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைத் தாண்டி, அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஊரடங்கு எனும் கசப்பு மருந்தை விழுங்கி, மக்களின் உயிரைக் காப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்.

அதேநேரத்தில், சில சமூக விரோதிகள் ரெம்டெசிவர் மருந்துகளைப் பதுக்கி, கள்ளச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். அதுபோலவே, ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர் விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் வருகின்றன. பேரிடர் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும்.

தடுப்பூசி இறக்குமதி, ரெம்டெசிவர் மருந்து விநியோகம், ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்தல், கட்டுப்பாட்டு மையங்கள் வாயிலாக உடனுக்குடன் சிகிச்சைக்கான ஏற்பாடு என தமிழக அரசு தொய்வின்றி தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் உயிரின் மீதும் அக்கறை கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வரும் நிலையில், அதற்கு மாறாக, ரெம்டெசிவர் மருந்துகளை பதுக்குவோர்மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர்மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். .. என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.