
கொரோனா காலத்தில் மிகுந்த நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கித் தவிக்கும் நிலையில், மதுவின் விலையை உயர்த்தி புதுச்சேரியைப் போல தமிழகத்தில் குறைந்த நேரத்தில் தினமும் மதுக் கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி காலை 6-00 மணி முதல் காலை 10-00 வரை மட்டுமே கடைகள் திறந்து இருக்கும் என்றும், இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் எனவும் தகவல் கசிந்துள்ளது.
தமிழ்மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக., அரசு, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது. மேலும், ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப் படும் என்றும் அரசு அறிவித்தது.
புதிதாக பொறுப்பேற்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது. இது அதிவேகத்தை அடைந்துள்ள கொரோனா பரவல் சங்கிலியை துண்டிக்க உதவியாக இருக்கும் என்று கருதப் பட்டது. இதன் ஒரு பகுதியாக, மதுக்கடைகள் மூலம் கொரோனா பரவுவதை கட்டுப் படுத்தும் விதமாக, ஊரடங்கு காலமான 14 நாட்களும் மதுக்கடைகள் அடைக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டது.
இந்த நிலையில், மது வகைகளை முன்னதாகவே மது குடிப்பவர்கள், கள்ள வியாபாரம் செய்பவர்கள் அதிக அளவில் வாங்கிக் குவித்தனர். இதனால் அந்த இரு நாட்களும் மது விற்பனை அதிகமாக இருந்தது.
மேலும், தமிழகத்தில் மதுக்கடைகள் அடைக்கப் பட்ட நிலையில், அண்டை மாநில எல்லைகளில் வசிப்பவர்கள் அதிக அளவில் அண்டை மாநிலங்களுக்குச் சென்று மதுவகைகளை காத்திருந்து வாங்கி வந்தனர். ஆந்திர மாநிலத்தில் பொது முடக்கம் அமலில் இருந்தாலும், மதுக்கடைகள் காலை முதல் 12 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப் பட்டது. இதனால் திருத்தணி அருகே வசிப்பவர்கள் ஆந்திர மாநிலத்தில் பங்களாமேடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மது வாங்கி வந்தனர். அதே போல் கர்நாடக எல்லையிலும் தமிழ் மாநிலத்தில் இருந்து பெருமளவில் சென்று மது வாங்கி வந்தனர்.
இந்நிலையில் தமிழ் மாநிலத்திலேயே டாஸ்மாக் கடைகளைத் திறந்து குறுகிய நேரம் விற்பனையை மேற்கொள்ள அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.