June 24, 2021, 12:01 am
More

  ARTICLE - SECTIONS

  திருப்புகழ் கதைகள்: மார்க்கண்டேயர் கதை!

  சித்தத்தைச் சிவன்பால் வைத்திருந்தனர். நெடுங்காலம் மக்கட்பேறு இல்லாமையால் மனம் வருந்தி,காசி என்னும் திருத்தலத்தை அடைந்து,

  thiruppugazh stories
  thiruppugazh stories

  திருப்புகழ் கதைகள் பகுதி 32
  கறுக்கும் அஞ்சன (திருப்பரங்குன்றம்) திருப்புகழ்
  – முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –

  கடல் கதற, ஆதிசேடன் முடி நெறிய, அண்டம் நடுங்க, அரக்கர்தலை மலைபோல் குவிய, உதிரநதி பெருக, போர்புரிந்த தீரரே! உமாதேவியாரது திருவருளுடைய சிவக்கொழுந்தன்ன கணபதிக்கு இளைய சகோதரரே! காலனைக் காலால் உதைத்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றிய மகாதேவரது புதல்வரே! திருப்பரங்குன்றத்தில் உறைபவரே! மாதர் மயக்கமாகிய துன்பத்தை நீக்கிஎனக்கு நல்லருள் புரிவீர்.

  கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு
       நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு
       கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு ….. நகையாலே

  களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ
       மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்
       கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு … கொடுபோகி

  நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற
       அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர
       நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு ……மிடறூடே

  நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென
       இசைத்து நன்கொடு மனமது மறுகிட
       நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற ……அருள்வாயே

  நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென
       உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென
       நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென ……வரைபோலும்

  நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு
       சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு
       நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர …… அடுதீரா

  திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு
       புழைக்கை தண்கட கயமுக மிகவுள
       சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரும் …… இளையோனே

  சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய
       பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு
       திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண …… பெருமாளே.

  காலனைக் காலால் உதைத்த வரலாறு

  அநாமயம் என்னும் வனத்தில் கவுசிக முனிவரது புத்திரராகிய மிருகண்டு என்னும் பெருந்தவ முனிவர் முற்கால முனிவரது புத்திரியாகிய மருத்துவதியை மணந்து, தவமே தனமாகக் கொண்டு சித்தத்தைச் சிவன்பால் வைத்திருந்தனர். நெடுங்காலம் மக்கட்பேறு இல்லாமையால் மனம் வருந்தி,காசி என்னும் திருத்தலத்தை அடைந்து, மணிகர்ணிகையில் நீராடி, விஸ்வேஸ்வரரை நோக்கி ஓராண்டு பெருந்தவம் புரிந்தனர்.

  வேண்டுவார் வேண்டிய வண்ணம்வரமருளும் விடையூர்தி, விண்ணிடைத் தோன்றி, “மாதவம்செய்தோனே, நினக்கு யாது வரம் வேண்டும்?” என்றனர். முனிவர் பெருமான் முப்புரமெரித்த பூதநாயகனைப் போற்றி செய்து புத்திரவரம் வேண்டுமென்றனர்.

  அதுகேட்ட விடமுண்ட கண்டன்புன்னகை பூத்து “தீங்குறுகுணம், ஊமை,செவிடு, முடம், தீராப்பிணி, அறிவின்மையாகிய இவற்றோடு கூடிய நூறு வயது உயிர்வாழ்வோனாகிய மைந்தன் வேண்டுமோ? அல்லது சகலகலா வல்லவனும் கோல மெய்வனப்புடையவனும் குறைவிலா வடிவுடையவனும் நோயற்றவனும் எம்பால் அசைவற்ற அன்புடையவனும் பதினாறாண்டு உயிர்வாழ்பவனுமாகிய மைந்தன் வேண்டுமா? சொல்வாயாக” என்றனர். முனிவர், “வயது குறைந்தவனே ஆயினும் சற்புத்திரனே வேண்டும்” என்றனர். அவ்வரத்தை நல்கி அந்த நாகாபரணர் மறைந்தார்.

  ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியின் அருளால் மிருகண்டு முனிவரின் தரும பத்தினியாகிய மருத்துவதி காலனது இடத்தோள் துடிக்கவும் (இதுஒருகெட்டசகுனம்), பூதல இடும்பை நடுங்கவும், புரை தவிர் தருமம்ஓங்கவும், மாதவமுனிவர்உய்யவும், வைதிக சைவம் வாழவும் கருவுற்றனள்.

  பத்து மாதங்களுக்குப் பின் இளஞ்சூரியனைப் போல் ஒரு மகவு தோன்றியது. தேவ துந்துபிகள்ஆர்த்தன. விண்ணவர் மலர்மழைச் சிந்தினர். முனிவர் குழாங்கள் குழுமி ஆசி கூறினர். பிரம்மதேவர் வந்து “மார்க்கண்டேயன்” என்று பேர் சூட்டினார். ஐந்தாவது ஆண்டில் சகல கலையுங் கற்றுணர்ந்த மார்க்கண்டேயர் சிவபக்தி, அறிவு, அடக்கம், அடியார் பக்தி முதலிய நற்குணங்களுக்கு உறைவிடம் ஆயினர்.

  பதினைந்து ஆண்டுகள் முடிந்து பதினாறாவது ஆண்டு பிறந்தது. அப்பொழுது தந்தையும்தாயும் அவ்வாண்டு முடிந்தால் மகன் உயிர் துறப்பான் என்று எண்ணி துன்பக் கடலில் மூழ்கினர். அதுகண்ட மார்க்கண்டேயர் இரு முதுகுரவரையும் பணிந்து “நீங்கள் வருந்துவதற்கு காரணம் யாது?’ என்று வினவ, “மைந்தா! நீ இருக்க எமக்கு வேறு துன்பமும் எய்துமோ? சிவபெருமான் உனக்குத் தந்த வரம் பதினாறு ஆண்டுகள்தாம். இப்போது நினக்குப் பதினைந்தாண்டுகள் கழிந்தன. இன்னும் ஓராண்டில் உனக்கு மரணம் நேருமென எண்ணி ஏங்குகின்றோம்’ என்றனர்.

  மார்கண்டேயர் மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றதை நாளை காணலாம்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  [orc]

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  24FollowersFollow
  74FollowersFollow
  1,262FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-