
வாழைக்காய் பொடிமாஸ்
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 2,
மிளகு – ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
தனியா – அரை டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
சோம்பு – கால் டீஸ்பூன்,
பூண்டு பல் – 4,
பச்சை மிளகாய் – ஒன்று,
வெங்காயம் பெரியது – 1,
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
கருவேப்பிலை உப்பு தேவையான அளவிற்கு.
வாழைக்காய் பொடிமாஸ் செய்ய தேவையான மசாலா கலவை
வெறும் கடாயில் மேலே குறிப்பிட்ட அளவின் படி மிளகு மற்றும் துவரம் பருப்பை சேர்த்து வறுக்க வேண்டும். அதன் பின் தனியா, சீரகம், சோம்பு போன்றவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். இந்த மசாலாக் கலவையை வாழைக்காய் பொடிமாஸ் உடன் சேர்ப்பதால் அதன் சுவை அருமையாக இருக்கும். இந்தப் பொடியை உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்ய கருணைக்கிழங்கு போன்ற பொடிமாஸ்கள் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.
செய்முறை :
பெரிய வாழைக்காய்கள் 2 எடுத்துக் கொண்டு அதன் அடி பாகத்தையும், காம்புப் பகுதியையும் நீக்கிவிட்டு இரண்டாக கத்தரித்து கொள்ளவும். இந்த வாழைக்காய்களை தண்ணீரில் மூழ்கும் அளவிற்கு ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். ஆறிலிருந்து ஏழு நிமிடம் வரை வாழைக்காய்களை நன்றாக வேக விடுங்கள். நீங்கள் கத்தியால் லேசாக சொருகி பார்த்தால் தெரியும் வாழைக்காய் வெந்து விட்டதா இல்லையா என்று. வாழைக்காய் நன்கு வெந்த பின் தண்ணீரை வடித்து ஆற விடுங்கள். அதன்பின் அந்த வாழைக்காய்களை தோல் நீக்கி விட்டு கேரட் துருவுவது போல் துருவிக் கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு தாளித்தம் செய்ய வேண்டும். அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கிய பின் துருவி வைத்துள்ள வாழைக்காய் துருவலை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதை நன்கு பிரட்டி கொண்டே வர வேண்டும். சில நிமிடங்கள் கழித்து பொடி செய்து வைத்துள்ள மசாலா கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கிளறிக் கொண்டே வர வேண்டும். வாழைக்காய் நன்கு வெந்து வந்தபின் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி மல்லித் தழை தூவி இறக்கி விடலாம். இப்போது வித்தியாசமான சுவையுடன் கூடிய அற்புதமான வாழைக்காய் பொடிமாஸ் தயார் ஆகிவிட்டது.
இது எல்லா வகையான சாதத்திற்கும், குழம்பு வகைகளுக்கு ஏற்ற அட்டகாசமான சைட் டிஷ்ஷாக இருக்கும்.