
லாட்டரி விற்பனை மீதான தடை நீக்கம்?
நிதி நிலையை காரணம் காட்டி தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி விற்பனைக்கு அனுமதி தர திமுக அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக சித்தரஞ்சன் சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
18 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறந்தது. இதனால் குறிப்பிட்ட சிலருக்கும், அரசுக்கும் பெரும் வருவாய் கிடைத்து வந்தது. அதேநேரம், என்றாவது ஒருநாள் லட்சாதிபதி ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில், தினக்கூலி பணியாளர்களும், ஏழை எளியோரும் லாட்டரி சீட்டுக்கு அடிமையாகவே இருந்தனர்.
சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை லாட்டரி வாங்கவே செலவழித்ததால், அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றன. இதில் மதுபோதைக்கு அடிமையான பலர், லாட்டரி சீட்டுக்கும் அடிமையாகிக் கிடந்தனர்.
இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் 2003 ஜனவரியில்,
அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா லாட்டரி விற்பனைக்கு தடை விதித்தார். ஆன்லைன் லாட்டரியும் தடைசெய்யப்பட்டது.
இதன் மூலம் ஏற்பட்ட வருவாய் இழப்பானது, 2001-ல் முற்றிலும் அரசுடையாக்கப்பட்ட மதுக்கடைகள் மூலம் ஈடுகட்டப்பட்டது.
ஆனாலும், லாட்டரி சீட்டுகள் தடையை மீறி ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,திமுக நிர்வாகிகளால் நிழல் முதலமைச்சர் என்று அழைக்கப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசனை பிரபல லாட்டரி அதிபர் கோவை மார்ட்டின், காங்கிரஸ் முன்னாள் எம்.பி,ஜே.எம்.ஹாரூண் ஆகியோர் தரப்பு சந்தித்துள்ளது.
மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா இதற்கான ஏற்பாட்டை செய்ததாக தெரிகிறது. அப்போது, அரசின் வருவாயைப் பெருக்க,லாட்டரி விற்பனை மீதான தடையை நீக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. குறைவின்றி சம்பிரதாயங்களை செய்யவும் தயார் என அவர்கள் கூறியபிறகு, உதயநிதியுடன் கலந்து பேசிவிட்டு, முதலமைச்சர் மூலம் அறிவிப்பை வெளியிட வைப்பதாக சபரீசன் உறுதியளித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை மார்ட்டினும், ஜே.எம். ஹாரூனும் திமுக–வுக்கு மிகவும் நெருக்கமானவர்களாவே அறியப்படுபவர்கள் என்பதால்,விரைவில் தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி வழங்கப்படலாம். டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க இருப்பதாலும், கொரோனா பேரிடர் காரணமாக தமிழ்நாட்டின் நிதி நிலையை கடும் சரிவை சந்தித்துள்ளதாலும், நிதி வருவாய்க்காக, லாட்டரி விற்பனையை முறைப்படுத்தி அனுமதிப்பதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படலாம்!
மேலும், அண்டை மாநிலமான கேரளாவில் இன்னமும் லாட்டரி விற்பனை படுஜோராக நடந்து வருவதையும், லாட்டரி விற்பனையை அனுமதித்தால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு தோராயமாக ஏழாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்பதையும் அரசு விளக்கக் கூடும். இதனால், சிக்கிம், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மேகலயா மாநில லாட்டரிகள் மீண்டும் தமிழ்நாட்டுக்குள் விரைவில் வலது காலடி எடுத்து வைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இதனிடையே, லாட்டரிச் சீட்டை மீண்டும் தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் குரல் கொடுத்தார். அது விமர்சனத்துக்கு உள்ளானது. அதுகுறித்து விளக்கம் அளித்த கார்த்தி சிதம்பரம், லாட்டரி சீட்டை எதற்காக கொண்டு வர வேண்டும் என்று நான் சொன்னதன் நோக்கத்தை யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம், ஏழைகளுக்கு தரமான சுகாதாரம், ஏழை மாணவர்களுக்கு இலவச கல்லுாரி மேற்படிப்பு வேண்டும் என்பதற்காக, லாட்டரி சீட்டை கொண்டு வரலாம் என்று தான் கூறிய யோசனை விவாதப் பொருளாக மாறி இருப்பது வேதனைகுரியது!
லாட்டரி சீட்டின் மூலம் வரும் வருமானத்தை வைத்து, தரமான மருத்துவம், கல்லூரி மாணவர்களுக்கான இலவச மேற்படிப்பு ஆகியவற்றை கொடுக்க முடியும் என்றும், இதனை தவிர,
லாட்டரி சீட்டு இல்லாமல், வேறு சிறப்பான வகையில் வருமானம் வந்தாலும், ஏழை மக்களுக்கு தரமான மருத்துவம்,
மாணவர்களுக்கு இலவச மேற்படிப்பு இரண்டையும் கொடுக்க முடிந்தால், அதனை தான் வரவேற்பதாகவும் கூறினார்!
தற்போது, லாட்டரிச் சீட்டு அனுமதிப்பது தொடர்பான விவாதமும் சமூகத் தளங்களில் களை கட்டியிருக்கிறது.