
கொரோனா தொற்று கடந்த ஆண்டு பரவ தொடங்கிய நிலையில், இன்று வரை இதன் பாதிப்பு இருந்து வருகிறது. இந்த தொற்றினால் பலர் தங்களின் உறவினர்களை இழந்துள்ள நிலையில், பலர் தங்களின் வாழ்வாதாரத்தையும் இழந்து, பசியில் தவித்து வருகின்றனர்.
பசி தாங்க முடியாமல் இறந்தவர்களின் எண்ணிகையும் அதிகரித்து கொண்டு தான் உள்ளது. இந்த சூழலில் பலர் தங்களால் முடிந்த உதவிகளை பலருக்கு செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ மிகவும் சவாலான காரியங்களைச் செய்து வருகிறார்கள்.
திருவாரூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், சொந்த செலவில் தங்களது வீட்டிலேயே மூன்று வேளை, 40 கொரோனா நோயாளிகளுக்குச் சத்தான உணவு வகைகளைச் சமைத்து, அவர்களது வீட்டிற்கே சென்று வழங்குவது நெகிழ வைக்கிறது.

திருவாரூர் தியாகராஜ நகரில் வசிக்கும் சீனிவாசன் – புவனேஸ்வரி, சூரியநாராயணன் – ஸ்ரீவித்யா சகோதர தம்பதிகள், தங்களது வீட்டிலேயே ஊட்டச்சத்துமிக்க உணவுகளைச் சமைத்து, தினமும் 40 கொரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளை வழங்கி வருகிறார்கள்.
காலையில் வழக்கமான உணவு வகைகளோடு சிறுதானிய தோசை, பயிறு தோசை, துளசி, இஞ்சி, மிளகு, மஞ்சள், கிராம்பு கலந்து செய்யப்பட்ட கசாயம் வழங்குகிறார்கள். மதியம் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, வறுவலோடு பருப்பு உசிலி, காய்கறி சாலட், வேப்பம்பூ ரசம், பச்சைப்பயறு சுண்டல், கொண்டைக்கடலை சுண்டல், சிவப்பு அவல் வழங்குகிறார்கள். இரவு உணவாக இட்லி, பொங்கல், சிறுதானிய தோசையோடு பனங்கற்கண்டு, மஞ்சள், மிளகு கலந்த பால் வழங்குகிறார்கள்.
வீட்டுச் சாப்பாடாக இருந்தால்தான் உடலுக்கு மேலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால் இவற்றை முழுக்க முழுக்க தங்களது வீட்டிலேயே தயார் செய்கிறார்கள்.
இது குறித்து பேசிய சூரியநாராயணன் “என் அண்ணி புவனேஸ்வரியும், என் மனைவி ஸ்ரீவித்யாவும் சேர்ந்து மிகவும் நேசிப்போடு, தங்களோட கைப்பக்குவத்துல இந்த உணவுகளைத் தயார் செய்றாங்க.
கொரோனா நோயாளிகள் குறைந்தபட்சம் 15 நாள்களுக்காவது சத்தான உணவுகள் சாப்பிடுறது ரொம்ப அவசியம். என் சகோதரி சவுமியா சைதன்யா ஹைதராபாத்துல நியூட்ஷிரியனிஸ்ட்டா இருக்கார்.

அவங்களோட ஆலோசனையின் படி தான் உணவு வகைகளை முடிவு பண்ணினோம். கொரோனா நோயாளிகள் எங்களை தொடர்புகொள்ளலாம்னு ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்ல பதிவுகள் போட்டோம். நிறைய பேர் தொடர்புகொண்டாங்க.
தினமும் மூணு வேளையும், அவங்க வீட்டு வாசல்ல, காம்பவுண்ட்ல சாப்பாட்டை வச்சிட்டு, போன் பண்ணுவோம். வந்து எடுத்துக்குவாங்க. இதுல எதுவும் குறைகள் இருக்கா, சாப்பாட்டோட அளவு போதுமானு போன்ல கேட்டு மாற்றங்கள் செய்வோம். இதை எங்களோட சொந்தச் செலவுலதான் செய்றோம். இது எங்களுக்கு மிகப்பெரிய ஆத்ம திருப்தி” என்றார்.



