
கள்ளழகர் திருக்கோயிலுக்கு சொந்தமான 15 இலட்சம் மதிப்பிலான நன்செய் நிலம் மீட்டு, அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் ஸ்ரீகள்ளழகர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடம் பிள்ளையார்நத்தம் கிராமத்தில் உள்ளது. இந்த இடம் வேதபாராயணத்திற்லகாக கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அரசின் மதிப்பான ரூபாய் 15 இலட்சம் மதிப்பிலான 1 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த நிலத்தினை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதையடுத்து, திருக்கோயில் துணை ஆணையர்அனிதா, மதுரை உதவி ஆணையர் விஜயன், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலங்காநல்லூர் காவல்துறையினர் ஆகியோர் சம்பந்தப்பட்ட திருக்கோயில் நிலத்தினை மீட்டனர்.
பின்னர் அங்கு திருக்கோயில் நிலம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும் திருக்கோயில் நிலங்களை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அவற்றை மீட்கப்படுவதுடன், ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருக்கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்..