
கோவா பல்கலைக்கழக அறிவியலாளர்கள் புதிய வகை பல்லி ஒன்றைக் கண்டுபிடித்து அதற்கு கெக்கோ (gecko) என பெயரிட்டுள்ளனர்.
கோவா பல்கலைக்கழக வளாகத்தில் பல்லி ஒன்றை பார்த்த ஆய்வாளர்களுக்கு வியப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு இப்படியொரு பல்லியைப் பார்த்தில்லை என நினைத்த அவர்கள், அதனைப் பிடித்து ஆய்வுக்குட்படுத்தினர்.
அப்போது, அதேமாதிரியான இன்னொரு பல்லியும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்துள்ளது. இரண்டு மாதிரிகளையும் சேகரித்தபோது, அவை இதுவரை கண்டுபிடிக்கப்படாத பல்லிகள் என உறுதி செய்தனர். அதற்கு கெக்கோ எனவும் பெயரிட்டுள்ளனர்.
இந்த சிறிய பல்லி இனமானது மாமிச உண்ணிகள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லிகள், உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகம் இருப்பதையும் அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
கெக்கோ பல்லி இனத்திற்கு ஹெமிபிலோடாக்டைலஸ் கோயென்சிஸ் (Hemiphyllodactylus goaensis) எனவும் அடையாளப்படுத்தியுள்ளனர்.
பல்லிகள் கோவாவில் கண்டுபிடிக்கப்பட்டதை உறுதி செய்யும் விதமாக பெயரில் கோவாவைச் சேர்த்து ‘goa’ensis என சூட்டியுள்ளனர். புதிய பல்லிகளின் உடல் அளவு 32 மில்லி மீட்டர் உள்ளது. இவை வீடுகளில் வாழும் பல்லிகளை விட சுமார் 3 மடங்கு அளவில் சிறியது.
புதிய பல்லிகளின் இருப்பு குறித்து பேசியுள்ள அறிவியலாளர்கள், கெக்கோ பல்லிகள் பரவலாக காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆபத்தில் இல்லை என்றாலும் அதன் வாழ்விடங்களான தாவரங்கள் மற்றும் கட்டுமானங்கள் அழிப்பு, அவற்றின் வாழ்வியல் சூழலுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்தப் பல்லிகளில் மைக்ரோஹாபிடாட்கள் உள்ளன. பாம்புகளின் உடல்களில் காணப்படும் செதில்களைப் போல் 13 முதல் 14 வென்ட்ரல் செதிகள் உள்ளன.
ரிங் கோடுகள், 16 முதல் 18 டார்சல் செதிகள், ஒரே மாதிரியான உருவமைப்பை உருவாக்கும் தட்டு போன்ற சிறிய கட்டமைப்புகள் பல்லியில் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சிறிய அளவிலான காலடி தூரத்திற்கு குதிக்கும் கெக்கோ பல்லிகள், இயக்கத்தில் மெதுவாக இருந்தாலும், வேட்டையாடுவதில் சுறுசுறுப்பாக செயல்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூச்சிகள், வெட்டுக்கிளிகள், கரப்பான் பூச்சிகள் ஆகியவற்றை உணவாக எடுத்துக்கொள்கின்றன. பெரியப் பூச்சுகளை உண்பதற்கு சிரமப்படுகின்றன.
தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருக்கும் பல்லிகள் இதே இனத்தை சார்ந்தவையா? வேறு மாதிரிகள் உள்ளனவா? என்பது குறித்து அடுத்தக்கட்ட ஆய்வுகளை ஆய்வாளர்கள் தொடங்கியுள்ளனர்.
பல்லிகளின் இயற்கை வாழ்விடங்களை குறித்து அறிந்து கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாவும் கோவா பல்கலைக்கழக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அண்மையில் புதிய வகையான தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்று பல்வேறு தாவர மற்றும் பூச்சியினங்கள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வாழ்ந்து வருவதால், அந்த மலைத் தொடரை பல்லுயிர் பெருக்கத்தின் புகழிடம் என அறிவியலாளர்கள் அழைக்கின்றனர்.
இந்த ஆய்வுக்கு தாக்கரே வனவிலங்கு அறக்கட்டளையின் அகன்ஷ் கண்டேகர் தலைமை தாங்கினார். அவருடன் இஷான் அகர்வால், நிதின் சாவந்த், பார்மார், திகான்ஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.