வங்கிகளில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஆட்டோ டெபிட் செய்யப்படுவதற்கான புதிய கட்டுப்பாடுகள் அக்.1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பலர் மாதாந்திர முறையில் செலுத்தி வருகின்றனர். ஒருவேளை குறிப்பிட்ட தேதிக்கு மேல் இந்த பணத்தை செலுத்த தவறிவிட்டால், கார்டில் உள்ள பணம் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே ஆட்டோ-டெபிட் செய்யப்படும்.
சில சமயங்களில், அவசர தேவைக்கு பணம் இருப்பு வைக்கப்பட்ட அடுத்த நிமிடத்திலேயே, ஆட்டோ டெபிட் மூலம் தொகை எடுக்கப்பட்டிருக்கும்.
இந்தச் சூழலில் ஆட்டோ டெபிட் முறையில் இனி வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் பணம் எடுக்கப்படாது எனும் புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது.
அதன்படி ஒரு சேவை முடியப்போகிறது என்றால், 24 மணி நேரத்திற்கு முன்பாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலமாகவோ அல்லது இ-மெயில் மூலமாகவோ notification சென்றடையும்.
notification-ல் வாடிக்கையாளின் பெயர், கட்டண விவரம், எதற்கான தொகை என்பது போன்ற விவரங்கள் இருக்கும்.
இந்த notification-க்கு வாடிக்கையாளர் அனுமதி வழங்கும்பட்சத்திலேயே அந்த பணபரிவர்த்தனையை வங்கிகள் செயல்படுத்த முடியும்.
5 ஆயிரம் ரூபாய்க்கு கீழே உள்ள பணபரிவர்த்தனைக்கு மட்டும், ஆர்.பி.ஐ-யால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
5 ஆயிரம் ரூபாய் மேல் பரிவர்த்தனை இருக்கும்பட்சத்தில், ஓடிபி எனும் ஒன்டைம் பாஸ்வேர்டு மூலம் வாடிக்கையாளர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டியிருக்கும்.
கடந்த மார்ச் மாதம் இந்த கட்டுப்பாடுகளை ஆர்.பி.ஐ விதித்த நிலையில், வங்கிகள் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட ஆர்.பி.ஐ. ஆறு மாதம் கால அவகாசம் கொடுத்த நிலையில், தற்போது அக்டோபர் 1ம் தேதி முதல் விதிமுறை அமலுக்கு வருகிறது.