காயத்துடன் பிடிபட்ட புலி குட்டியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முடீஸ் பஜார் பகுதியில் உடல் சோர்வுற்ற நிலையில் கடந்த 27-ஆம் தேதி புலி குட்டி ஒன்று நடந்து சென்றுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அந்த புலிக்குட்டியை பிடித்து விட்டனர்.
இந்நிலையில் 8 மாத வயதான அந்த புலிக்குட்டி முள்ளம்பன்றியை வேட்டையாடியதால் அதன் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த புலிக்குட்டியின் எச்சத்தில் இருந்து முள்ளம்பன்றியின் முள் வந்து கொண்டே இருந்ததால் வனத்துறையினர் அதற்கு வயிற்று வலி மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய மருந்துகளை ஊசிமூலம் செலுத்துகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் தாய் புலியை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனை அடுத்து இந்த புலிக்குட்டியின் காயம் சரியாகி வருவதாகவும், அதன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
புலிக்குட்டியின் உடல்நிலை சரியான பிறகு அதன் தாயுடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.