ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
கொரோனா பரவல் பேரிடர் தடுப்பு நடவடிக்கை இரண்டாம் அலையின்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டது.
அப்போது செயற்கை சுவாசத்திற்கான ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவியது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், திரவ நிலை ஆக்சிஜன் உருளை மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் நிறுவ ஒன்றிய சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள பி.எஸ்.ஏ. ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
அந்த வகையில், தொடர்ந்து, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 ஆயிரம் கிலோ லிட்டர் திரவ நிலை ஆக்சிஜன் உருளை அமைக்கப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் சார்பில் பல லட்ச ரூபாய் செலவில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பரமக்குடி அரசு தாலுகா மருத்துவமனையிலும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இவ்விரு ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைக்க உள்ளார்.
ராமநாதபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்