காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 3 ஓன்றியங்களுக்கு முதல் கட்டமாக நடைபெற்றது. இதில் காலை 7 மணி முதலே வாக்காளர்கள் வாக்களிக்க துவங்கினர்.
இந்நிலையில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்ட்பட்டது சிங்காடிவாக்கம் கிராமம். இங்கு 665 ஆண் வாக்காளர்களும் , 724 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1389 வாக்காளர்கள் உள்ளனர்.
இங்குள்ள 5வது வார்டு பகுதியான பள்ளத் தெருவில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார் இவரது மகள் பார்வதி கடந்த வருடங்களுக்கு முன் உத்திரமேரூர் பகுதியில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்.
இவரது வாக்காளர் அடையாள அட்டை இன்னும் தனது கணவர் ஊருக்கு மாற்றப்படாத நிலையில் இன்று சிங்கடிவக்கம் பள்ளியில் வாக்களிக்க வந்த போது இவரது வாக்கை ஏற்கனவே அளித்துவிட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதில் அதிர்ச்சி அடைந்த பார்வதி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தன்னுடைய வாக்கை வேறு ஒருவர் கள்ளத்தனமாக செலுத்தியுள்ளதை கண்டு, சினிமா திரைப்படத்தில் நடிகர் விஜய் சேலஞ்ச் ஓட்டு கேட்டு தேர்தல் அலுவலரிடம், கூறியது நினைவுக்கு வந்து அதேபோல் தேர்தல் அலுவலரிடம் பார்வதி கேட்டுள்ளார்.
சற்று நேரம் தேர்தல் அலுவலர்கள் ஆலோசனைக்கு பின் ரூபாய் 2 பெற்றுக்கொண்டு சேலஞ்ச் வாக்களிக்க அவருக்கு அனுமதி அளித்துள்ளனர். இச்ம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், 1,744 வாக்குச்சாவடியில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
இதற்காக பாதுகாப்பு பணியில் 4,250 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த மாதம் 13ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து 15ல் இருந்து 22 வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. கூர்ந்தாய்வு முடிந்து 25ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஒரு வாரத்திற்கும் மேலாக வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை முதற்கட்டமாக காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய மூன்று ஒன்றியங்களில், 680 ஓட்டுச்சாடிகளில், நடைபெற்றது.
இதில் பதற்றமான 255 ஓட்டுச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில், மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஏழு துணை காவல் கண்காணிப்பாளர்கள், 20 ஆய்வாளர்களும், 2,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதை தவிர 53 மொபைல் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் இருப்பர். 30 க்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தலன்று சோதனைச்சாவடிகள் செயல்பட உள்ளன. கூடுதல் தேவைக்காக 35 பேர் கொண்ட அதிரடிப் படையினரும் தயாராக உள்ளனர் .
செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் மாவட்ட காவல்துறையினர் 1,000 பேரும், வெளிமாவட்ட காவல்துறையினர் 1,250 பேரும் என 2,250 போலீசார், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர்