சைபர் குற்றவாளிகள் KYC மோசடி மூலம் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.67 லட்சத்திற்கு மேல் பணத்தை திருடி உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக, தற்போது அனைத்தையும் ஆன்லைனில் செய்யும் வசதி வந்துவிட்டது.. குறிப்பாக ஆன்லைன் பேமேண்ட் முறையிலேயே மக்கள் அதிகமாக பணப்பரிமாற்றம் செய்கின்றனர்.
எனினும் எந்தளவுக்கு ஆன்லைன் பேமெண்ட் முறை வேலையை எளிமையாக்கியதோ அதே அளவுக்கு அதில் மோசடிகளும் அதிகரித்துள்ளன.
இதுகுறித்து வங்கிகளும், சைபர் பிரிவு போலீசாரும் மக்களை தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
ஆனால் சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்ற புதுமையான வழிகளை பின்பற்றுகிறார்கள். என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள சைபராபாத் போலீசார் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஏர்டெல், பேடிஎம் போன்றவற்றுக்கு KYC புதுப்பிப்பு என்ற பெயரில் மோசடி செய்ததாக புகார்கள் வருகின்றன.
எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
சைபராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா இதுகுறித்து பேசிய போது ” மோசடி செய்பவர்கள் NGROK, Bitly, Google View View form போன்றவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இணைப்பை அனுப்புகிறார்கள்.
இதுவரை, 140 வழக்குகள், SBI KYC மோசடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.. அப்பாவி மக்களின் வங்கிக்கணக்கில் இருந்து சுமார் ரூ. 67,10,021 மோசடி செய்யப்பட்டுள்ளது.
மோசடி செய்பவர்கள் எஸ்பிஐ கணக்கு மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களைத் தொடர்பு கொண்டு, தொடர்ச்சியாக எஸ்எம்எஸ் மற்றும் அழைப்புகள் மூலம் தங்கள் KYC விவரங்களைப் புதுப்பிக்கும்படி எச்சரிக்கிறார்கள்.
Any Desk app, Quick Support App, Team Viewer App போன்ற பல்வேறு தொலைதூர அணுகல் செயலிகளை பதிவிறக்குமாறு அவர்கள் வாடிக்கையாளரிடம் கேட்கிறார்கள். வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கு விவரங்களை உள்ளிட்டு பணத்தை மாற்றும்போது, அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டு, பல்வேறு பரிவர்த்தனைகளில் மோசடி செய்பவரின் கணக்கில் பணம் டெபிட் செய்யப்படும்.. ” என்று தெரிவித்தார்.
சமீபத்தில் மோசடி செய்பவர்கள் NGROK மற்றும் Bitly இணைப்புகள் மற்றும் KYC ஐ புதுப்பிக்க பயனர்கள் இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும் என்று கூறும் செய்திகளை அனுப்பத் தொடங்கினர்.
பயனர் அந்த இணைப்பை கிளிக் செய்யும் போது, அது பக்கத்தை போலி வலைப்பக்கத்திற்கு திருப்பி அனுப்புகிறது. இது எஸ்பிஐ நெட் பேங்கிங் போன்ற தோற்றத்தில் இருக்கும். பயனர் ஐடி, கடவுச்சொல் மற்றும் ஓடிபி போன்ற நெட் பேங்கிங் சான்றுகளை பயனர் உள்ளிடும்போது, மோசடி செய்பவர் விவரங்களைச் சேகரித்து, பயனாளர் கணக்கில் உள்நுழைந்து பணத்தை தங்கள் கணக்குகளுக்கு மாற்றுகிறார்.
எனவே KYC விவரங்களைப் புதுப்பிக்கும்படி கேட்கும் செய்திகளை அல்லது அழைப்புகளை ஒருபோதும் நம்ப வேண்டாம்.. மக்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை குறிப்பாக இரகசிய PIN (தனிப்பட்ட அடையாள எண்) அல்லது ஒரு முறை கடவுச்சொல் (OTP) ஆகியவற்றை வெளியிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்த வங்கி அதிகாரியும் அல்லது ஊழியரும் வாடிக்கையாளரிடம் PIN/OTP கேட்க மாட்டார்கள் என்பதை மக்கள் ஒருபோதும் மறக்க வேண்டாம்.