சில மாதங்களே உயிருடன் இருப்பார் என டாக்டர்கள் கூறிய நிலையில், தன் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக தந்து, தனக்கு உயிர் கொடுத்த தந்தையின் உயிரைக் காப்பாற்றி உள்ளார் கோல்கட்டாவைச் சேர்ந்த இளைஞர்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த ஒரு தந்தைக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், ஆறு மாதங்கள் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதனால், அவருடைய குடும்பமே அதிர்ச்சியில் உறைந்தது. ஒரு பக்கம் சிகிச்சை நடந்து வந்த நிலையில், தந்தைக்கும், அவருடைய மகனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
வீட்டில் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். சேர்ந்து விளையாடி பொழுதைப் போக்கினர். அப்போது, தன் தந்தையின் நிலை குறித்து மகன் மிகவும் வருத்தம் அடைந்தார்.
தந்தையின் உயிரைக் காப்பாற்ற எதையும் செய்யலாம் என முடிவு செய்தார். கொரோனாவில் இருந்து மீண்ட உடன், தன் கல்லீரலை தந்தைக்கு தானமாக வழங்க மகன் முன்வந்தார்.
ஆனால், கொழுப்பு சத்து அதிகம் இருந்தது. அதையடுத்து உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு வாயிலாக கொழுப்பைக் குறைத்தார் மகன்.
பின், டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, மகனின் 65 சதவீத கல்லீரலை எடுத்து, தந்தைக்கு பொருத்தி உள்ளனர். சிகிச்சைக்கு பின், இருவரும் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர்.
இது தொடர்பாக ‘Humans of Bombay’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
அப்பா ஒரு நாளும் புகை பிடித்தது இல்லை, குடித்தது கூட கிடையாது. அப்படி இருக்க இது எப்படி சாத்தியம் எனக் குழம்பிப் போனார். உடனே மருத்துவரை அணுகிய நிலையில், அவருக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு நன்கொடையாளர்கள் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் 6 மாதங்கள் மட்டுமே அப்படி உயிருடன் இருப்பார் என டாக்டர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனார்.
அதேநேரத்தில் அந்த இளைஞரின் அப்பாக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. ஆனால் தனது அப்பாவைக் காப்பாற்றும் முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் தனது கல்லீரலை தானம் செய்ய முன்வந்தார். இதையடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் அந்த இளைஞரின் கல்லீரல் அவரது தந்தையோடு பொருந்திப் போனது.
ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. அந்த இளைஞருக்குக் கொழுப்பு கல்லீரல் இருந்தது. இதனால் அவர் தனது உடல் எடையைக் குறைத்து, முறையான உடற்பயிற்சி, மற்றும் உணவுக் கட்டுப்பாடு இருந்தால் தான் கல்லீரலை தானம் செய்யத் தகுதி உடையவர் ஆவார். இதையடுத்து கடுமையாக உடற்பயிற்சி செய்தும், தனது உடல் எடையைக் குறைத்தும் கல்லீரலைத் தனது அப்பாவிற்கு தானம் செய்யும் நிலைக்கு அந்த இளைஞர் வந்துள்ளார்.
இதையடுத்து அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தில் உள்ள பலருக்கும் அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது. ஆனால் அந்த இளைஞரின் தந்தை, நான் படுக்கையிலிருந்து எழும்பி வந்து உன்னை லுடோவில் வெற்றி பெறுவேன் என நகைச்சுவையாகக் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை முடிந்து அந்த இளைஞர் கண்விழித்த நிலையில், மருத்துவர் அவரை பார்த்து, நீ உன் அப்பாவைக் காப்பாற்றி விட்டாய் எனக் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டதும் அந்த இளைஞர் சந்தோசம் தாங்காமல் கதறி அழுதுள்ளார். ஒரு மகனாக எனக்கு வேறு என்ன சந்தோசம் இருக்க முடியும். உங்களுக்கு மகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தன் உயிரைக் காப்பாற்ற, உயிரை பணயம் வைத்த மகன் குறித்து தந்தையும் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
குடும்பம், பாசம், தியாகத்துக்கு ஒரு முன்னுதாரணமாக இந்த தந்தை, மகன் விளங்குகின்றனர் என, நண்பர்களும், உறவினர்களும் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.