ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அனைவருக்குமே, ஏதாவதொரு சமயத்தில் வைரஸ் மற்றும் மால்வேர் குறித்த சந்தேகம் இருக்கும்.
ஏனென்றால், உலகளவில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
ஷாப்பிங் முதல் பணப்பரிவர்த்தனை வரை அனைத்தையும் ஸ்மார்ட்போன் மூலம் மக்கள் எளிதாக செய்துவிடுவதால், இது சைபர்கிரைம் குற்றவாளிகளின் கண்களை உருத்தாமலா இருக்கும்?.
கண்கவர் விளம்பரங்கள், கவர்ச்சி லிங்குகள் ஆகியவற்றை ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு அனுப்பும் சமூகவிரோதிகள், இந்த லிங்குளை கிளிக் செய்து தங்கள் வலைக்குள் விழுபவர்களை தங்களின் டார்க்கெட்டாக மாற்றுகின்றனர்.
அதாவது, ஸ்மார்ட்போன் யூசர்கள் போலி லிங்குகளை கிளிக் செய்தவுடன், அந்த லிங்குகளில் இருக்கும் வைரஸ்கள், ட்ரோஜன்கள் மற்றும் மால்வேர்கள் உடனடியாக செல்போன்களில் ஊடுருவி, பணப் பரிவர்த்தனை தகவல்கள், தனிப்பட்ட தகவல்களை சேகரித்துக்கொள்கின்றனர்.
இதனைவைத்துக் கொண்டு குறிப்பிட்ட நபரை தொடர்பு கொள்ளும் அவர்கள் பிளாக்மெயில் செய்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர். போதுமான தகவல்கள் கிடைக்கும்பட்சத்தில், உரிய நபர்களுக்கு தெரியாமலேயே, வங்கியில் இருந்து முழுப் பணத்தையும் சுருட்டிவிடுகின்றனர்.
சைபர் குற்றவாளிகள் போலி வங்கி பயன்பாடுகள் மூலம் மக்களின் இரகசிய தரவு அல்லது ஆன்லைன் பேங்கிங் ஐடி-கடவுச்சொற்கள் போன்றவற்றைக் கண்காணித்து பின்னர் உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் அனைத்துப் பணத்தையும் திருடுகின்றனர்
ஆப்பிள் மற்றும் ஆன்டிராய்டு என எந்த மொபைலாக இருந்தாலும், யூசர்களின் அனுமதியில்லாமல் சைபர்கிரைம் குற்றவாளிகள் ஸ்மார்ட்போன்களுக்கு நுழைய வாய்ப்பில்லை.
யூசர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், பயன்படுத்தும் மொபைலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
மால்வேர் என்றால் என்ன?
மால்வேர்கள் என்பது கணிணிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் ஊடுருவி சேதப்படுத்தும் மோசமான சாப்ட்வேர். மால்வேர்களில் வைரஸ், வார்ம்ஸ், டிரோஜன், ஆட்வேர், ரான்சம்வேர் என பல வகைகள் உள்ளன.
உங்கள் மொபைலில் வைரஸ் இருக்கிறதா? கண்டிபிடிப்பது எப்படி?
- நீங்கள் செல்போன் அதிகம் பயன்படுத்தாவிட்டாலும், அதனை தொடும்போது மிகவும் சூடாக இருக்கும். இது, உங்கள் செல்போனில் வைரஸ் இருக்கிறது என்பதற்கான அடையாளம். சமூகவிரோதிகள் மறைமுகமாக உங்கள் செல்போனை உபயோகித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
- இணைய டேட்டா வேகமாக தீர்ந்து போதல் அல்லது தொலைப்பேசி கட்டணம் விரைவாக தீர்ந்து விடுதல், பேட்டரி சீக்கிரம் ஜீரோ நிலையை அடைந்தால், செல்போன்களில் வைரஸ் உள்ளது என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.
- வழக்கதுத்திற்கு மாறாக பல்வேறு விளம்பரங்கள் செல்போனில் தோன்றும். இது. தவறான சாப்ட்வேர் உங்கள் செல்போனில் ஊடுருவி மறைந்திருக்கிறது என்பதற்கான அறிகுறி. அவை விளம்பரங்களை திரையிடுவது மட்டுமல்லாமல் செல்போன் தகவல்களையும் திருடலாம்.
- உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஸ்பேம் மெசேஜ்ஜூகள், தொடர்புகளை சேகரித்து, அவர்களின் செல்போன்களையும் பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.
மால்வேர்களை நீக்குவது எப்படி?
- நீங்கள் பதிவிறக்கம் செய்யாத சாப்ட்வேர்கள், லிங்குகள் மொபைலில் தங்கியிருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
- உங்கள் செல்போனில் இருக்கும் செயலிகளில், எவை அதிக டேட்டாவை உபயோகிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். செயலியின் உபயோகத்தில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அந்த செயலியை உடனடியாக நீக்கிவிடுங்கள்.
- செல்போனில் இருக்கும் அனைத்து பயன்பாடுகளையும் ஒருமுறை பார்வையிடுங்கள். அதில் ஏதேனும் தேவையற்ற பதிவிறக்கங்கள் அல்லது லிங்குகள் இருந்தால் உடனடியாக நீக்க வணேடும். நீங்கள் பயன்படுத்தாத ஏதேனும் இருந்தால் அதனையும் நீக்க செய்யுங்கள்.
வைரஸ்களை தவிர்ப்பது எப்படி?
- கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகளை மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். பாதுகாப்பு இல்லாத இணையப் பக்கங்கங்களில் இருந்து எந்தவொரு செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
- எந்த ஒரு ஆப்-ஐ பதிவிறக்கும் போதும், அதன் பெயரில் கவனம் செலுத்துங்கள். அதில் ஏதேனும் எழுத்துப்பிழை இருந்தால் அதை பதிவிறக்கம் செய்யாதீர்கள். அந்த ஆப்-ன் பெயரில் ஒரு எழுத்து கூட தவறாக எழுதப்பட்டிருந்தால், அது ஒரு போலி ஆப் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த ஆப் மூலம் உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணம் திருடப்படலாம்..
3.ஆப்-ஐ பதிவிறக்கும் போது, அந்த ஆப் எத்தனை முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
உண்மையில், ஒரே பெயரில் பல செயலிகளை நீங்கள் பார்த்தால், அவற்றின் பதிவிறக்க எண்ணிக்கையை கண்டிப்பாகப் பாருங்கள், ஏனெனில் அதன் மூலம் உண்மையான மற்றும் போலியான ஆப்களை அடையாளம் காண முடியும்.
- எந்தவொரு செயலியை பதிவிறக்கம் செய்தாலும், அவை உங்கள் செல்போனில் மேற்கொள்ளக்கூடிய சில அனுமதிகளைக் கேட்கும். செயலியின் தன்மையைப் பொறுத்து, குறிப்பிட்ட அனுமதியை மட்டும் கொடுக்க வேண்டும்.
- கணிணியைப்போலவே செல்போன்களுக்கும் சில ஆன்டிவைரஸ் சாப்ட்வேர்கள் இருக்கின்றன. அவற்றை பதிவிறக்கம் செய்து செல்போனை தேவையற்ற வைரஸ்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.