இந்த காலத்தில் குழந்தைகள் மிகவும் சிறிய வயதிலேயே பல சாதனைகளை படைத்தது நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர்.
1330 திருகுறள்களை நேராகவும், தலைகீழாகவும் ஒப்பிப்பது, கொடிகளை பார்த்தே அது எந்த நாட்டினுடையது என்று சரியாக சொல்வது, நாடுகள் அல்லது மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களை சொன்னால் குறிப்பிட்ட நாடு அல்லது மாநிலத்தை சரியாக சொல்வது என மிக்சிறிய வயதிலேயே சாதனைகளை படைத்து அசத்தி வருகின்றனர்.
இதனிடையே ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 வயதான ஒரு சிறுமி மொத்தம் 24 நிமிடங்கள் 50 வினாடிகளுக்குள், சுமார் 108 ஆன்மீக மந்திரங்களை உச்சரித்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் (India Book of Records) இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.
ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி சாய் ஷ்ரேயான்ஸி (D Sai Shreyansi) என்ற 6 வயது சிறுமியை இந்த சாதனையை செய்து இருக்கிறார்.
தாரதாபடா கிராமத்தைச் சேர்ந்த பிரபல கல்வியாளரான ராஷ்மி ரஞ்சன் மிஸ்ராவின் (Rashmi Ranjan Mishra) பேத்தி தான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் இந்த 6 வயதான சாய் ஷ்ரேயான்ஸி.
தனது சாதனை குறித்து பேசியுள்ள சிறுமி சாய் ஷ்ரேயான்ஸி “எங்கள் வீட்டில் வாராந்திர பூஜைகள் வழக்கமாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பூஜைகளின் போது வீட்டிற்கு வரும் மத பெரியவர்கள் பாடும் மந்திரங்கள் என்னை கவர்ந்தது. எனவே அவர்கள் மந்திரங்களை எப்படி உச்சரிக்கிறார்கள் , எப்படி பாடுகிறார்கள் என்பதை தொடர்ந்து கவனித்து வந்தேன்.
எனது இந்த தனிப்பட்ட கவனத்தால் அவர்கள் சொல்லிய மந்திரங்களை நானே கற்று கொண்டேன்” என்றார். மேலும் பேசிய சிறுமி நானே மந்திரங்களை ஆர்வமாக கற்று கொண்ட போதும் அதை சரியாக உச்சரிக்க என்னுடைய பெற்றோரும், தாத்தாவும் (ராஷ்மி ரஞ்சன் மிஸ்ரா) உதவி செய்து நான் தேர்ச்சி பெற உதவினர் என்றார்.
கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக ஆன்லைன் கிளாஸ் மூலம் தான் சிறுமி படித்து வருவதாக பெற்றோர் கூறி இருக்கிறார்கள்.
சிறுமியின் தாயான ஷஸ்மிதா மிஸ்ரா கூறுகையில், “சாய் ஷ்ரேயான்ஸி எப்படி மந்திரங்களை ஆர்வமாக கற்று கொண்டாளோ அதே போல ஒடிஸி கிளாசிக்கல் டான்ஸை கற்று தேர்ச்சி பெறுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறாள்.
108 ஆன்மீக மந்திரங்களை குறுகிய நேரத்திற்குள் ஜபித்து எப்படி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்தாளோ, அதே போல ஒடிஸி டான்ஸிலும் மிகப்பெரிய பெயரை பெற்று சாதனை படைப்பாள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.
இதனிடையே சாய் ஷ்ரேயான்ஸிவின்சாதனையை அங்கீகரித்துள்ள இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அதற்கான சான்றிதழையும் சிறுமிக்கு வழங்கி உள்ளது.