
தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள உபரி இடைநிலை ஆசிரியர்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பணிமாற்றுதல் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 1 ம் தேதி முதல் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
அடுத்ததாக 1 – 8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்து வருகிறது.
அதன்படி பள்ளிக்கல்வித்துறையின் இணையப்பக்கமான எம்மிஸ் இணையப்பக்கத்தில் மாணவர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.
புதிய கல்வியாண்டு தொடங்கியது முதல் பள்ளிகளில் தினசரி மாணவர் சேர்க்கை குறித்த விவரத்தை எமிஸ் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள பட்டதாரி காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்தது. இதனால் அரசு ஆசிரியர் காலிபணியிடங்களை கண்டறியும் நோக்கில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை மாணவர்கள் விகித அடிப்படையில் கணக்கெடுக்கவும் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் கணக்கெடுத்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.
அடுத்த கட்டமாக அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 பட்டதாரி ஆசிரியர் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது. அதன்படி தற்போது விண்ணப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் உபரி இடைநிலை ஆசிரியர்கள் மேல்நிலை பள்ளிகளுக்கு இடம் மாற்றுதல் செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனுப்பிய சுற்றறிக்கை மாற்று பணி ஆணை பெற்ற ஆசிரியர்கள் பணியில் சேர வேண்டும். பணியில் இருந்து விடுவித்த மற்றும் பணியேற்ற அறிக்கையினை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் கரூர் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மாற்று பணி பெறும் ஆசிரியர்களுக்கு பயணப்படி வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.