
மறைந்த புல்லாங்குழல் கலைஞர் என்.ரமணியின் 87-வது பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
என்.ரமணியின் 87-வது பிறந்தநாள் விழா சென்னை மயிலாப்பூர் லஸ் அவென்யூவில் உள்ள ராகசுதா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், ரமணியின் புல்லாங்குழல் அகாடமி சார்பாக மூத்த மிருதங்க கலைஞரும், கலைமாமணி விருது பெற்றவருமான குருவாயூர் துரை-க்கு ‘ரமணீய மணி’ என்ற சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மிருதங்க கலைஞர் முஷ்ணம் வி.ராஜா ராவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, ‘புல்லாங்குழல் இசை கலைஞர்களின் மிகத் தனித்துவத்தை ரமணி பெற்றிருந்தார்.
அதனாலேயே மிகவும் கடினமான ராகத்தையும் மிக எளிமையாக வாசித்துவிடுவார். புல்லாங்குழல் இசை மேதை ரமணி, பல்லாயிரக்கணக்கான கச்சேரியில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
தான் மறைந்த பின்னரும், தனது பெயர் நிலைத்து நிற்கும்படியாக, புல்லாங்குழல் அகாடமி மூலமாக ஏராளமான கலைஞர்களை உருவாக்கிச் சென்றுள்ளார்’ என்றார்.
கவுரவ விருந்தினராகக் கலந்து கொண்ட வயலின் இசைக் கலைஞர் நாகை ஆர்.முரளிதரன் பேசும்போது, ‘புல்லாங்குழல் இசையை ரமணியை விட மிகச் சிறப்பாக வாசிக்கும் கலைஞர்கள் இன்னும் பிறக்கவில்லை’ என்று பாராட்டிப் பேசினார்.
இதில் என்.ரமணியின் மகன் ஆர்.தியாகராஜன், புல்லாங்குழல் கலைஞர் பிரபஞ்சம் எஸ்.பாலசந்திரன் கலந்து கொண்டனர்.