
பொள்ளாச்சி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தரமற்றதாக கண்டறியப்பட்ட இனிப்பு, கார வகைகளை கைப்பற்றி அழித்தனர்.
தீபாவளியை முன்னிட்டு பொள்ளாச்சி நகர பகுதிகளில் இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அவற்றின் தரம் மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்டறிய மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்புராஜ், வேலுசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர், கடந்த சில நாட்களாக கோவை சாலை, உடுமலை சாலை, ராமகிருஷ்ணாநகர், ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, மீன்கரை சாலை, மார்க்கெட் சாலை, வெங்கடேசா காலனி, பெருமாள் செட்டி வீதி ஆகிய பகுதிகளில் உள்ள இனிப்பு தயாரிக்கும் இடங்கள், விற்பனைக்கூடம், உணவகங்கள், பேக்கரிகள் ஆகிய இடங்களில் தொடர் ஆய்வு நடத்தினர்.
இனிப்பு, காரம் தயாரிக்கும் இடம்மற்றும் விற்பனை செய்யும் இடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.
பழைய செய்தித்தாள்கள் மற்றும் அளவுக்கு அதிகமான செயற்கை நிறமிகள் பயன்படுத்திய, சுகாதாரமற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த 780 கிலோ எடையுள்ள இனிப்பு மற்றும் கார வகைகளை பறிமுதல் செய்து, அவற்றை குழி தோண்டி புதைத்து, பினாயில் ஊற்றி அழித்தனர்.
இது குறித்து, கோவை மாவட்ட நியமன அலுவலர் கு.தமிழ்செல்வன் கூறும்போது, ‘பால் பொருட்களால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள் 4 நாட்கள் வரை மட்டுமே உண்ணத் தகுந்ததாக இருக்கும்.
அதற்கு மேல், பாக்டீரியா படிந்து, விஷத் தன்மையுள்ளதாக மாறிவிடும். எனவே, பால் பொருட்களால் தயாரிக்கப்பட்ட இனிப்புகளை அன்றன்றைக்கு தயாரித்து விற்று விட வேண்டும்.
மேலும் ஒருமுறை உபயோகித்த சமையல் எண்ணெயை மீண்டும் உணவு தயாரிக்க பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒருமுறை உபயோகித்த சமையல் எண்ணெயை சேகரித்து அதிலிருந்து மறு சுழற்சி முறையில் பயோ-டீசல் உற்பத்தி செய்யும் திட்டம் மாநில உணவு பாதுகாப்பு துறை வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.
பயன்படுத்திய எண்ணெயை, பயோ டீசலாக மாற்றி கொடுக்க, 9087790877, 8445517187, 7339530143 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.