சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கோயில் கந்தசஷ்டி பெருவிழாவின் வேல் வாங்கும் நிகழ்ச்சி மற்றும் சூரம்சம்ஹார நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அனுமதி கிடையாது என நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாகையை அடுத்த சிக்கலில் உள்ள அருள்மிகு நவநீதேசுவரசுவாமி திருக்கோயிலில் தனி சந்நிதிக் கொண்டு காட்சியளிக்கிறார் அருள்மிகு சிக்கல் சிங்காரவேலவர்.
சூரனை சம்ஹாரம் செய்ய முருகப் பெருமான் இத்தலத்தில் அன்னை வேல்நெடுங்கண்ணியிடமிருந்து சக்திவேல் பெற்றார் என்பது ஐதீகம்.
இதன்படி, இங்கு ஆண்டு தோறும் கந்தசஷ்டி பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். சூரசம்ஹாரத்துக்கு முதல் நாள் நடைபெறும் சக்திவேல் வாங்கும் நிகழ்வின் போது, சிங்காரவேலவரின் திருமுகத்தில் வியர்வைப் பொழியும். இந்த ஆன்மிக அற்புதத்தைக் காண ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.
நிகழாண்டின் கந்தசஷ்டி பெருவிழா நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெறும் நிலையில், கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இக்கோயிலின் வேல் வாங்கும் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் நவம்பர் 8-ஆம் தேதி நடைபெறும் சக்திவேல் வாங்கும் விழா, 9-ஆம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம், 10-ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சிகளை https://w.w.w.youtube.com//templelivestream என்ற யூடியூப் மூலமும், www.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலமும் பக்தர்கள் நேரலையாக காணலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.